கோவை: கோவை காரமடை அரங்கநாத சுவாமி கோயில் தேரோட்டம் இன்று (மார்ச் 12) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டம், காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி திருக்கோயில் சுமார் 900 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. பழமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடத்தப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதன் பின்னர், தினமும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார். அதைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடந்தது. இதற்காக, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத சுவாமி அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற கோஷத்துடன், தேரினை வடம் பிடித்து இழுத்தனர். கோயிலின் நான்கு மாட வீதிகள் வழியாக திருத்தேர் பவனி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். காரமடையில் நடைபெற்ற திருத்தேரோட்ட நிகழ்ச்சியினை முன்னிட்டு கோவை - மேட்டுப்பாளையம் இடையேயான சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக கோவையிலிருந்தும், மேட்டுப்பாளையத்தில் இருந்தும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தேரோட்டத்தைத் தொடர்ந்து வியாழக்கிழமை பரிவேட்டை நிகழ்வும், குதிரை வாகன உற்சவமும், வெள்ளிக்கிழமை தெப்போற்சவமும் நடைபெற உள்ளது.