பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை (மார்ச் 12) மாலை கோலாகலமாக நடைபெற்றது. ‘ஓம் சக்தி, பராசக்தி’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பழநி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா கடந்த பிப்.21-ல் முகூர்த்தக் கால் ஊன்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பிப்.25-ம் தேதி திருக்கம்பம் சாட்டுதல், மார்ச் 4-ம் தேதி கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. திருக்கல்யாணம் நேற்று (மார்ச் 11) நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை (மார்ச் 12) மாலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, அம்மன் தேரேற்றம் நடந்தது. ‘ஓம் சக்தி, பராசக்தி’ முழக்கத்துடன் நான்கு ரத வீதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் வலம் வந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 9 மணிக்கு வண்டிக்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது விழாவின் நிறைவாக நாளை (மார்ச் 13) மாலை நீராடலும், கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.