திண்டுக்கல்: பழநி முருகன் கோயில் யானை கஸ்தூரியை, சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் யானை கஸ்தூரி (58). இந்த யானை பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள காரமடை தோட்டத்தில் வளர்க்கப்படுகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்களில் கஸ்தூரி பங்கேற்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் நெருக்கமான யானையாக கஸ்தூரி திகழ்கிறது.
இந்நிலையில் குன்றக்குடி கோயில் யானை தீயில் சிக்கி உயிரிழந்தது, திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை தாக்கியதில் இருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, தமிழகத்தில் உள்ள கோயில் யானைகள் வனத்துறை மற்றும் கால்நடைத்துறையின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது.
இருப்பினும், யானை கஸ்தூரி முறையாக பராமரிக்கப்படுகிறதா?, சரியான முறையில் உணவு வழங்கப்படுகிறதா? மற்றும் யானையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கவும், பதிவு செய்யும் வகையில் கஸ்தூரி இருக்கும் பகுதியில் 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் வனத்துறை மற்றும் கோயில் அதிகாரிகள் யானையை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ஒவ்வொரு மாதமும் யானையின் ரத்தம், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. யானையின் உடல்நிலையை கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். யானை கஸ்தூரி நலமுடன் உள்ளது. இருந்தும், யானையின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணிக்கும் வகையில் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று கூறினர்.