புதுச்சேரி: புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகளின் 187-வது குருபூஜை விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற சித்தர் கோயிலான இங்கு, ஒவ்வொரு ஆண்டும் குருபூஜைப் பெருவிழா மே மாதம் நடைபெறும். நடப்பு ஆண்டுக்கான 187-வது ஆண்டு குருபூஜை விழா நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று கணபதி, நவக்கிரக ஹோமங்களைத் தொடர்ந்து ருத்திர ஜெபம் நடைபெற்றது. அதையடுத்து ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
அதில் கலச அபிஷேகம், அலங்கார பூஜைகளுக்குப் பிறகு தீபாராதனை காட்டப்பட்டது. அபிஷேக பூஜைகளில் புதுவை முதல்வர் ரங்கசாமி, மாநில அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனி ஜெயக்குமார், கல்யாண சுந்தரம் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
திரளான பக்தர்களும் பூஜையில் பங்கேற்று வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை மங்கள இசை, பக்தி இசைக் கச்சேரி, திருவாசகம் முற்றோதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.