1,000 ஆடுகளின் ரத்தம் குடித்த மருளாளி... திருச்சி கிராமக் கோயிலில் ஆச்சர்ய திருவிழா! 


திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் குட்டிக்குடி திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி. | படங்கள்: ர. செல்வமுத்துகுமார்

திருச்சி: திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் குட்டிக்குடி திருவிழாவில், அடுத்தடுத்து ஆயிரம் ஆடுகளின் ரத்தத்தை மருளாளி குடித்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

திருச்சி உறையூரை தலைநகராக கொண்டு, ஆட்சி புரிந்த கரிகாலச் சோழன் காலத்தில் கிராம தேவதைகள் வழிபாடு வெகு சிறப்பாக இருந்தது. சமூக மக்கள் ஒற்றுமைக்கான விழாவாக, இந்த கோயில் திருவிழாக்களை சோழர்கள் வடிவமைத்திருந்தனர். இதில் முக்கிய கோயிலாக, புத்தூர் கோரையாறு கரையில் அமைந்துள்ள குழுமாயி அம்மன் கோயில் விளங்குகிறது.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்.

இக்கோயிலில், அனைத்து ஜாதி மக்களும் பங்கேற்கும் மாசி திருவிழா, கடந்த, 4ம் தேதி இரவு காளியாவட்டம் உற்சவத்துடன் துவங்கியது. நேற்று ஓலைப்பிடாரியாக சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, புத்தூர், தென்னூர் பகுதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது வீடுகள்தோறும் பொதுமக்கள், சுத்தபூஜை எனப்படும் மாவிளக்கு, தேங்காய், பழங்கள், பூக்களை அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

குட்டிக்குடிக்கும் மருளாளி.

விழாவின் முக்கிய நிகழ்வான 'குட்டிக்குடி' திருவிழா இன்று காலை புத்தூர் மந்தையில் துவங்கியது. அரசு சார்பில், 5 ஆட்டு குட்டிகள் முதலில் வழங்கப்பட்டன. பலி கொடுக்கப்பட்ட ஆடுகளின் ரத்தத்தை மருளாளி சிவக்குமார் ஆவேசத்துடன் உறிஞ்சி குடித்தார். அதன்பின், அடுத்தடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளின் ரத்தத்தை மருளாளி குடித்த காட்சி, பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்தது. விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

குட்டிக்குடிக்கும் மருளாளி.

விழாவின் ஒரு பகுதியாக நாளை மஞ்சள் நீராட்டு வைபமும், நாளை மறுநாள் விடையாற்றி உற்சவமும், அம்மன் கோயிலில் குடிபுகும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. குழுமாயி அம்மன் திருவிழாவையொட்டி, மாநகர காவல்துறை ஆணையர் காமினி தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். திருவிழா காரணமாக புத்தூர், உறையூர் பகுதிகள் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன.

x