சோளங்குருணியில் 14-ம் நூற்றாண்டு கோயிலுக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம் 


மதுரை: திருப்பரங்குன்றம் அருகே சோளங்குருணியில் 14ம் நூற்றாண்டைச் சார்ந்த கோயிலுக்கு நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.

திருப்பங்குன்றம் அருகே சோழங்குருணி பகுதிக்கு கிபி.14-ம் நூற்றாண்டு காலத்தில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் இருந்து போத்தி ராஜா- வள்ளியம்மன் சிலைகளை பெட்டியில் கொண்டு வந்து கோவிலாக கட்டி மக்கள் வழிபடுவதாக சொல்லப்படுகிறது. இக்கோயிலில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே சட்டை (மேலாடை) இன்றி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். மகளிர் சன்னதிக்குள் செல்ல அனுமதி கிடையாது.

இந்நிலையில், போத்தி ராஜா - வள்ளியம்மன் கோயிலுக்கு கோபுர கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 28ம் தேதி கணபதி பூஜை அணுக்கிரக பூஜை வாஸ்து சாந்தி பூஜையுடன் முதல் யாக பூஜைகள் முடிந்தன. இதைத்தொடர்ந்து நேற்று இரண்டு, மூன்றாம், நான்காம் கால யாக பூஜை நிறைவுற்ற நிலையில், இன்று கோபுர மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

இதையொட்டி வலையங்குளம், நல்லூர், ஈச்சனோடை, பாப்பனோட, குதிரைக்குத்தி, போக்குவரத்து நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். திருமங்கலம் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் எஸ்ஐ பாஸ்கர இரணியன் உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

x