சேலம்: மயானக் கொள்ளை விழாவில் பக்தர்கள் காளி வேடம் பூண்டு ஆடு , கோழிகளைக் கடித்து ரத்தம் உறிஞ்சியவாறு ஆக்ரோஷ நடனமாடி ஊர்வலமாகச் சென்றனர்.
சேலத்தில் மாசி மாத அமாவாசையையொட்டி வரும் சிவராத்திரிக்கு மறுநாளான நேற்று மயான கொள்ளை விழா நடந்தது. இதில் பக்தர்கள் மயில் தோகையை கட்டிக் கொண்டு, இறந்த மனித உடலின் மண்டை ஓடு, கை, கால் எலும்புகளை வாயில் கடித்தபடி காளி வேடமிட்டு அங்காளம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினர். பின்னர், அங்கிருந்த பக்தர்கள் நேர்த்திக் கடன் கொடுத்த ஆடுகளையும், கோழியையும் வாயில் கடித்து ரத்தம் உறிஞ்சியபடி ஆக்ரோஷமாக நடனமாடியபடி காக்காயன் சுடுகாடுக்கு ஊர்வலமாக சென்றனர்.
சேலம் டவுன், பச்சப்பட்டி, கிச்சிப்பாளையம், தாம்பட்டி, பொன்னம்மாப்பேட்டை, குகை, செவ்வாய்ப்பேட்டை, அழகாபுரம், அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, ஜான்சன்பேட்டை, சின்னத்திருப்பதி, அம்மாப்பேட்டை, சூரமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மயான கொள்ளை விழா வெகு விமரிசையாக நடந்தது.
ஒவ்வொரு பகுதியில் இருந்தும் பக்தர்கள் காளி வேடமிட்டு மயில் தோகை அலங்காரத்துடன் டவுன் அங்காளபரமேஸ்வரி கோயிலுக்கு வந்தனர். கோயில் வளாகத்தில் மேளதாளங்கள், பம்பை, உடுக்கை ஒலிக்க ஆக்ரோஷமாக ருத்ர தாண்டவம் ஆடியபடி, அங்காள பரமேஸ்வரியை தரிசனம் செய்தனர். பின்னர், கோயிலில் இருந்து இரண்டாவது அக்ரஹாரம், காசி முனியப்பன் கோயில் தெரு, அணைமேடு வழியாக காக்காயன் சுடுகாடு நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது, நோய், திருமண தோஷம், குழந்தைபேறு வேண்டி பக்தர்கள் பலரும் சாலையில் குப்புறப்படுத்துக் கொள்ள, காளி வேடமிட்ட பக்தர்கள் ஒவ்வொருவரையும் தாண்டியபடி சென்றனர். காக்காயன் சுடுகாட்டை சென்றடைந்ததும், தகனமேடையில் இருந்த சாம்பலில் படுத்து உருண்டு சிவ தாண்டவம் ஆடி, கூடியிருந்த பொதுமக்களுக்கு அருளாசி வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பலாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மயானக் கொள்ளை விழாவையொட்டி சேலம் மாநகர போலீஸார் சின்னக்கடை வீதி, பட்டைக்கோயில், இரண்டாவது அக்ரஹாரம், ஆனந்தா பாலம், முதல் அக்ரஹாரம், அணைமேடு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்து, கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தினர்.
மயான கொள்ளை விழாவின் முக்கியத்துவம்: அகிலத்தை காக்கும் அம்மன் கடுங்கோபம் அடைந்து உலகில் உள்ள உயிர்களை பலி கொண்டு ஆக்ரோஷத்தில் இருந்தார். அப்போது அங்காளபரமேஸ்வரியின் கோபத்தை சாந்தப்படுத்த சிவன் ருத்ர நடனமாடி அம்மனை சங்கலியால் கட்டிப்போட்டார். அம்மனின் அடங்காத கோபத்தை கட்டுப்படுத்திய சிவன் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழாவுக்கு அடுத்து வரும் அமாவசை தினத்தில் அம்மனின் கட்டு அவிழ்க்கப்பட்டு உயிர் பலி வாங்க அனுமதி அளித்தார்.
அதன் அடிப்படையில் இந்த மயான கொள்ளை நிகழ்ச்சி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் பல நூறு ஆண்டுகாலமாக மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த மயான கொள்ளைக்காக பக்தர்கள் பதினைந்து தினங்களுக்கு முன்னரே விரதம் இருந்து மஹா சிவராத்திரி தினந்தில் அங்காளம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி மயான கொள்ளை விழாவில் பங்கேற்பது வழக்கம்.