ஒட்டன்சத்திரம்: வலையபட்டியில் உள்ள மகாலட்சுமி கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஒட்டன்சத்திரத்தை அடுத்த இடையகோட்டை அருகே வலையபட்டியில் மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் அமராவதி ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தத்தை கோயிலில் தெளித்து சுத்தப்படுத்தினர். நேற்று முன்தினம் மாலை விழா தொடங்கியது. நேற்று காலை பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்டனர்.
தொடர்ந்து, தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, பாரம்பரியமான சேர்வை ஆட்டம் ஆடினர். இதையடுத்து, 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்ந்திருக்க, தேங்காய்களை பக்தர்களின் தலையில் கோயில் பூசாரி உடைத்தார். அதன் பின்பு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.