தூத்துக்குடி: திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (பிப்.27) மாலை வழிபாடு நடத்தினார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவரை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் புத்தகங்களை கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கார் மூலம் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதிக்கு மாலை 5.15 மணியளவில் வந்தார். அவரை திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், வட்டாட்சியர் பாலசுந்தரம் ஆகியோர் வரவேற்றனர். மேலும் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபையினர் சென்டை மேளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவரை கடற்கரைக்கு அழைத்து சென்றனர். அங்கு கடற்கரையில் எடுத்து வைக்கப்பட்டிருந்த கடல்நீரை எடுத்து தலையில் தெளித்துவிட்டு காலை நனைத்து கொண்டார். தொடர்ந்து அவதார பதிக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கு வழிபட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த பெண்கள் குலவையிட்டு வரவேற்றனர். தொடர்ந்து பதியை மூன்று முறை சுற்றி வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அய்யா வைகுண்டர் படமும், விளக்கும் பரிசாக வழங்கப்பட்டது.
பின்னர் அவதாரபதியில் கொடிமரம் முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவி அய்யாவழி அகில திருக்குடும்ப சபை மக்களுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்து கொண்டார். பின்னர் அவதார பதியிலிருந்து வெளியே வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை 5.42 மணிக்கு இங்கிருந்து காரில் திருநெல்வேலிக்கு புறப்பட்டுச் சென்றார்.
நிகழ்ச்சியில் அய்யாவழி அகிலதிருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர், துணைத்தலைவர் அய்யாபழம், பெருளாளர் கோபால் மற்றும் நிர்வாகிகள், இந்து முன்னணி மாநில துணைதலைவர் வி.பி.ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆளுனர் வருகையை முன்னிட்டு எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
புகையால் திடீர் பரபரப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி அவதார பதிக்கு வந்ததும் ஓரமாக இருந்த அறையில் உடைமாற்ற சென்றார். அப்போது அதன் அருகில் இருந்த ஜெனரேட்டர் அறையில் இருந்து திடீரென பெரும் சத்தத்துடன் புகை மண்டலம் உருவானது. உடனடியாக அங்கிருந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று ஜெனரேட்டரை ஆப் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.