திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் திருவிழா மார்ச் 9-ம் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் மா.பிரதீப் குமார் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்ச்சொரிதல் விழா மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறு. இதையடுத்து, மார்ச் 9 மற்றும் 10-ம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும். கோயிலின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணிக்கப்படும். பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மார்ச் 9-ல் கோயில் சார்பாக பூச்சொரிதல், சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
இதனால், அன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஆகிய நேரங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. மார்ச் 10 முதல் ஏப்.5 வரை நாள்தோறும் மாலை சிறப்பு பூஜை காரணமாக மாலை 4 மணி முதல் 6 மணி வரை பக்தர்கள் தரிசனம் கிடையாது. இதேபோல, மார்ச் 9, 10, 16, 30 மற்றும் ஏப்.15 ஆகிய நாட்களில் 11 மணி அபிஷேகத்துக்கு பக்தர்கள் அனுமதி இல்லை. மார்ச் 9 முதல் ஏப்.22 வரை தங்கரத புறப்பாட்டுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
கோயிலுக்கு செல்லும் கடைவீதி, காவல் நிலையம் அருகில், கோயில் திருமண மண்டபம் முன்பகுதி மற்றும் தேவையான இடங்களில் மார்ச் 9,10 ஆகிய நாட்களில் 24 மணிநேரமும் மருத்துவ முகாம் செயல்படுத்தப்படும். மேலும், இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம், தேவையான இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வசதி, கூடுதல் முதலுதவி முகாம் மற்றும் மருத்துவ முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
ஆங்காங்கே சின்டெக்ஸ் தொட்டி அமைத்து குடிநீர் வசதி செய்து தரப்படும். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே தற்காலிக கூடுதல் கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகள் அமைத்து தரப்படும். அன்னதானம் வழங்குபவர்கள் அதற்கான அனுமதி பெற்ற இடத்தில் மட்டும், முறையாக உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து தரமான உணவை வழங்குவதை உணவு பாதுகாப்புத் துறையினர் உறுதி செய்ய வேண்டும். அனுமதி பெறாத இடங்களில் அன்னதானம் கண்டிப்பாக வழங்க கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, சமயபுரம் கோயில் இணை ஆணையர் பிரகாஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.