நீர் வரத்து வாய்க்கால் மூடப்பட்டதால் நீரின்றி வறண்டு கிடக்கும் பூமிநாதர் கோயில் தெப்பம்! 


விருதுநகர்: நீர்வரத்து வாய்க்கால் மூடப்பட்டதால் தேவாரப் பாடல்பெற்ற திருத்தலமான திருச்சுழி பூமிநாதர் கோயிலில் தெப்பம் நீரின்றி வறண்டு காணப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள பூமிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலத்தில் சிவன் ஒரு சமயம் பிரளயத்தைச் சுழித்து பூமிக்குள் புகச் செய்தார் என்பது தொன்நம்பிக்கை. மேலும் இது ரமண மகரிஷி பிறந்த தலமும் ஆகும். சிறப்பு மிக்க இத்தலம் பாண்டிய தேசத்தில் சுந்தரரது புராணத்திலும், அப்பர், சம்பந்தர் பாடிய வைப்புத் தலத்திலும் இடம்பெற்றுள்ளது. இத்தலத்தில் கௌதம முனிவர் தன் மனைவி அகலிகையுடன் ஸ்ரீ நடராஜர் சன்னதிக்கு எதிரில் உள்ளதையும் காணமுடியும்.

பாண்டிய மன்னன் பிருஹத் பாலனின் பிரம்மஹத்தி சாபம் இத்திருத்தலத்தில் நீங்கியதோடு அந்த அரசனின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பிரளய நீர்ப்பெருக்கை இறைவன் தன் திரிசூலத்தால் பூமியில் துவாரம் ஏற்படுத்தி தண்ணீரை வற்றச் செய்ததின் காரணமாக பிரளய விடங்கர் தனிச் சன்னதி அமைந்துள்ளது. ஆனால், இச்சிறப்பு மிக்க கோயில் தெப்பம் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோயிலைச் சுற்றிலும் குடியிருப்புகள் இந்த அளவுக்கு இல்லை. அண்மை காலங்களில் குடியிருப்புகளும் வணிகக் கட்டிடங்களும் அதிகமானதால் நீர் வரத்து ஓடை அடைக்கப்பட்டது. குண்டாற்றிலிருந்து பந்தனேந்தல் வழியாக திருச்சுழி பெரிய கண்மாய்க்கு நீர் வந்து சேரும். பெரிய கண்மாயில் தண்ணீர் நிறைந்ததும் மடை திறக்கப்பட்டு நீர் வரத்து வாய்க்கால் வழியாக பூமிநாதர் கோயில் தெப்பத்திற்கு தண்ணீர் வரும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நீர்வரத்து ஓடையில் கழிவுநீர் கலந்து வந்ததால், தெப்பத்திற்கும் கழிவுநீர் வந்து தேங்கியது. இதனால், தெப்பதிற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. தண்ணீர் வராத காரணத்தால் நீர் வரத்து வாய்க்கால் முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் சமீப காலமாக இந்த நீர் வரத்து ஓடை முழுமையாக அடைபட்டுள்ளது.

இதனால், கோயில் தெப்பத்திற்கு தண்ணீர் வருவதில்லை. எனவே, மீண்டும் நீர் வரத்து வாய்க்காலை தூர்வாரி சரிசெய்து, கழிவுநீர் கலக்காத வகையில் தெப்பத்திற்கு தண்ணீர் கொண்டுவர அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.