மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோயிலில் இன்று தேரோட்டம்!


ராமநாதபுரம்: மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று (பிப்.26) தேரோட்டம் நடைபெறுகிறது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சிவராத்திரி திருவிழா பிப்ரவரி 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 8-ம் நாளான நேற்று, நடராஜர் கேடயத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், கோயில் அனுப்பு மண்டபத்தில் பட்டயம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

திருவிழாவின் 9-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டமும், இரவு 9 மணியளவில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் மின் அலங்காரத்துடன் கூடிய வெள்ளி ரதத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது. மேலும், மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில் நடை இன்று இரவு முழுவதும் திறக்கப்பட்டிருக்கும். நாளை (பிப்.27) அக்னி தீர்த்தக் கடற்கரையில் அமாவாசை தீர்த்தவாரி உற்சவம் நடைபெறு கிறது.

x