மகா சிவராத்திரி: சதுரகிரி செல்ல நாளை முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி!


மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நாளை முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரி, மாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டுக்காக பிப்ரவரி 25 முதல் 28-ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் காலை 7 முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். மாலைக்குள் அடிவாரம் திரும்பிவிட வேண்டும். இரவில் கோயிலில் தங்க அனுமதி கிடையாது என வனத்துறை அறிவித்துள்ளது.

நேரக் கட்டுப்பாடு கூடாது: மகா சிவராத்திரி வழிபாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், நேரக்கட்டுப்பாடு இன்றி பக்தர்களை மலையேற அனுமதிக்க வேண்டும். மேலும், மகா சிவராத்திரி அன்று இரவு பூஜையில் பங்கேற்க அனுமதி வழங்க வனத்துறை, இந்து சமய அறநிலையத் துறை, மதுரை - விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x