திண்டுக்கல்: பழநி முருகன் கோயிலில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த கைலாசநாதர், பிருஹதீஸ்வரர் சந்நிதிகள் மீட்கப்பட்டு, பக்தர்கள் வழிபடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பழநி தேவஸ்தான கட்டுப்பாட்டில் 47 கோயில்கள் உள்ளன. ஆக்கிரமிப்பில் இருக்கும் கோயில் சொத்துகளை மீட்கும் முயற்சியில் தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.156 கோடி மதிப்புள்ள 329 இடங்கள் மீட்கப்பட்டுள்ளன. பழநி மலைக்கோயிலில் போகர் ஜீவ சமாதி அருகே உள்ள கல் மண்டபத்தில் கைலாசநாதர், விநாயகர், பிருஹதீஸ்வரர் மற்றும் பிருஹன்நாயகி அம்மன் சந்நதி உள்ளது.
ஆனால், சுவாமி சந்நிதிகள் இருந்ததே தெரியாத அளவுக்கு இந்த கல் மண்டபத்தை சிலர் ஆக்கிரமித்து தங்கள் பொருட்களை வைத்திருந்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் இந்த மண்டபத்தை காலி செய்ய வலியுறுத்தியும் ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்யவில்லை. இந்நிலையில் தேவஸ்தானத்தின் தீவிர நடவடிக்கையால் பல ஆண்டுகளுக்கு பிறகு ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்த கல் மண்டபம் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்தில் உள்ள சுவாமி சந்நிதிக்கு சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மூலவர், கைலாசநாதர் மற்றும் போகர் சமாதியை மட்டும் வழிபட்டு சென்ற பக்தர்கள், தற்போது கல் மண்டபத்தில் உள்ள சந்நிதிக்கும் சென்று தரிசனம் செய்கின்றனர்.