உதகை மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா: ஏராளமானோர் பங்கேற்பு


உதகை: உதகை மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தின் காவல் தெய்வங்கள் வாழும் கோயில், ஒரே கருவறைக்குள் மாரியம்மன், காளியம்மன் ஆகிய இரு தெய்வங்கள் குடிகொண்டுள்ள ஆலயம், உதகையின் பழம்பெரும் கோயில், தேர்த் திருவிழாவில் வெள்ளை நிறப் புடவை அணியும் அம்மன், 36 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கும் அபூர்வ ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக உதகை மாரியம்மன் கோயில் விளங்குகிறது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். இந்த கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக சன்னதிகள் புனரமைக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டது. இதை தொடர்ந்து இன்று மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை 8.45 மணி முதல் விநாயகர் வழிபாடு, முதற்காலயாக வேள்வி, மூல மந்திர யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதனையடுத்து இன்று காலை 7.20 மணி முதல் இரண்டாம் கால ஹோமம், மகா பூர்ணஹூதி, மகா தீபாராதனை, கடங்கள் எழுந்தரு செய்தல் நிகழ்ச்சியும் காலை 9.15 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. தலைமை அர்ச்சகர் சரவணன் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன், கோட்டாட்சியர் சதீஷ், நகராட்சி துணைத் தலைவர் ஜே.ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து காலை 9.30க்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற அன்னதானத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஜெகநாதன் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து இருந்தனர்.

x