ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
மாசி மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை, சாயரட்சை பூஜை மற்றும் கால பூஜைகளும் நடைபெற்றன.
காலை 10 மணிக்கு மேல் ராமநாதசுவாமி, பிரியாவிடை, பர்வதவர்த்தினி அம்பாள் ஆகியோர் சர்வ அலங்காரத்தில் நந்திகேசுவரர் மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு விநாயகருக்கு பூஜை செய்யப்பட்டதை தொடர்ந்து தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகா சிவராத்திரி திருவிழா துவக்கியது. இதில் கோயில் உதவி ஆணையர் ரவீந்திரன் உட்பட கோயில் அலுவலர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று, இரவில் கோயில் நாயகர் வாசலில் ஒளிவழிபாடு முடிந்து சுவாமி, நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளுகின்றனர். முன்னதாக மாலை 6 மணியளவில் திருகல்யாண மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவும், விவாத அரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிப். 20ல் நடை சாத்தல்: பிப். 20ல் அன்று கெந்தமாதன பர்வதத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளை முன்னிட்டு காலை 07 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ராமநாதசுவாமி கோயில் நடை சாத்தப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், தீர்த்தமாடவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பிப். 26ல் மகா சிவராத்திரியும், பிப்.27ல் அக்னி தீர்த்தக் கடற்கரையில் அமாவாசை தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும். திருவிழாவையோட்டி தினந்தோறும் திருக்கல்யாண மண்டபத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.