கொடைக்கானல்: கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் தேரோட்ட விழா இன்று வெள்ளிக்கிழமை (பிப்.14) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ளது பூம்பாறை மலை கிராமம். இங்கு பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. பழநிக்கு அடுத்தப்படியாக இக்கோயிலில் போகர் சித்தரால் தசபாஷாணத்தால் செய்யப்பட்ட முருகன் சிலை உள்ளது. இக்கோயிலில் தேரோட்ட விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தாண்டு விழா இன்று (பிப்.14) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, கோயில் பிரகாரத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் வேல், சேவல், மயில் படங்கள் இடம்பெற்ற கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் தினமும் சேவல், அன்னம், மயில், காளை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது.
பிப்.22ம் தேதி காலை 10 மணிக்கு மேல் தேரேற்றமும், மாலை 5 மணிக்கு மேல் பூத்தேரோட்டமும் நடைபெற உள்ளது. எங்கும் இல்லாத சிறப்பாக இக்கோயில் தேரின் இருபுறமும் வடகயிறு கட்டப்பட்டிருக்கும். தேரோட்டத்தில் வழக்கம் போல் முன் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் வடக்கயிறைப் பிடித்து தேரை பக்தர்கள் இழுக்க தொடங்குவர்.
மலைப் பகுதி என்பதால் சரிவான பகுதி வந்தவுடன் தேரின் பின்னால் இருக்கும் வடக்கயிறை பிடித்து இழுத்து மெதுவாக கீழே தேரை இறக்குவர். இவ்விழாவில் மலைக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வர். பிப்.23ம் தேதி கொடியிறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.