பழநி தைப்பூச விழாவில் ரூ.2.70 கோடிக்கு பஞ்சாமிர்தம் விற்பனை; 3 நாட்களில் 4 லட்சம் பேர் சாமி தரிசனம்!


திண்டுக்கல்: பழநியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி கடந்த 3 நாட்களில் 4.07 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.2.70 கோடிக்கு பஞ்சாமிர்தம் விற்பனை நடந்துள்ளது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த பிப்.5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று (பிப். 14) இரவு தெப்பத்தேர் மற்றும் கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது. தைப் பூசத் திருவிழாவையொட்டி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழநிக்கு வந்தனர். பழநி நகரமே விழாக்கோலம் பூண்டதுபோல் பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது.

தைப்பூசத் திருவிழாவையொட்டி, பிப்.10 முதல் 12-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் இலவசமாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த பிப்.10ம் தேதி ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 200 பேர், 11ம் தேதி தைப்பூச தினத்தில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 263 பேர், 12-ம் தேதி 61 ஆயிரத்து 200 பேர் என கடந்த 3 நாட்களில் மொத்தம் 4 லட்சத்து 7 ஆயிரத்து 663 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

தேவஸ்தானம் சார்பில் விற்பனை செய்யப்படும் அபிஷேக பஞ்சாமிர்தத்தை அதிக அளவில் பக்தர்கள் வாங்கிச் சென்றனர். பிப். 10-ம் தேதி ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 673 டப்பாக்கள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் அன்று ஒரு நாள் மட்டும் ரூ.54 லட்சத்து 58 ஆயிரத்து 550 வருவாய் கிடைத்துள்ளது.

பிப். 11-ம் தேதி ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 743 பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்றதன் மூலம் ரூ.63 லட்சத்து 68 ஆயிரத்து 880, பிப். 12-ம் தேதி ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 442 பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்றதன் மூலம் ரூ.33 லட்சத்து 59 ஆயிரத்து 30 வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 4 லட்சத்து 26 ஆயிரத்து 858 பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் ரூ.2 கோடியே 70 லட்சத்து 13 ஆயிரத்து 890 வருவாய் கிடைத்துள்ளது.

x