வடலூர் சத்தியஞான சபையில் நேற்று நடைபெற்ற தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று, ஜோதி தரிசனம் செய்தனர்.
கடலூா் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு 154-வது ஜோதி தரிசன விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு முதலே ஜோதி தரிசனத்தைக் காண சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் சத்தியஞான சபை வளாகத்தில் குவிந்தனர். நேற்று முன்தினம் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டு, சன்மாா்க்க கொடி ஏற்றப்பட்டது.
முக்கிய நிகழ்வான தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று நடைபெற்றது காலை 6 மணிக்கு 7 திரைகள் விலக்கப்பட்டு, முதலாம் ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் சன்மார்க்க அன்பர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை’ என்ற முழக்கத்துடன் ஜோதி தரிசனம் செய்தனர். தொடா்ந்து காலை 10, நண்பகல் 1, இரவு 7 மற்றும் இரவு 10 மணிக்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இன்று அதிகாலையும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. நாளை மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம் நடைபெறுகிறது. தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் ஜோதி தரிசனத்தை காணத் திரண்டிருந்தனர். இதையொட்டி, பல்வேறு அமைப்பினரால் அன்னதானம் வழங்கப்பட்டது.
அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அறநிலையத் துறை இணை ஆணையர் பரணிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி வடலூருக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏறத்தாழ 1.20 லட்சம் பேர் ஜோதி தரிசனத்தைக் காண வந்திருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்