கோவை: கோவை மருதமலை முருகன் கோயிலில் தைப்பூச தினத்தையொட்டி, தேரோட்டம் இன்று (பிப்.11) நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மருதமலை முருகன் கோயிலில், தைப்பூசத் திருத்தேர் திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அதிகாலை நடைதிறக்கப்பட்டு காலை, மாலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை போன்றவை நடத்தப்பட்டது. பின்னர், தினமும் மாலை சிறப்பு வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (பிப்.11) நடந்தது. இதையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விரதம் இருந்து பக்தர்கள் கொண்டு வந்த பால்குடம் மூலம் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்து, திருத்தேருக்கு எழுந்தருளினார்.
மருதமலை முருகன் கோயிலில் தேரோட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அவருடன் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன், அறங்காவலர் குழுவினர், அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோயிலை சுற்றி வலம் வந்த சுப்பிரமணிய சுவாமியின் தேரோட்டம் இன்று மாலை நிறைவடைந்தது. தொடர்ந்து இன்று மாலை யாகசாலை பூஜை, அபிஷேக பூஜை, தீபாராதனை போன்றவை நடத்தப்பட்டது.
தைப்பூசத்தையொட்டி வழக்கத்தை விட இன்று அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திரண்டனர். ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் அடிவாரம், மலைப்பாதை, படிக்கட்டுப் பாதை என எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமே இருந்தது. கோவையில் அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை, சத்தி சாலை ஆகிய பிரதான சாலைகள், இணைப்புச் சாலைகள் வழியாக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று (பிப்.10) இரவு நடந்தபடி மருதமலை கோயிலை இன்று அதிகாலை வந்தடைந்தனர்.
கையில் காவடி ஏந்தியபடியும், பால் குடம் ஏந்தியபடியும், ‘அரோகரா…’ கோஷம் போட்டபடி படியேறி, நீண்ட வரிசையில், சில மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து சென்றனர். பக்தர்களின் வருகையையொட்டி, மலைப்பாதையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து கோயில் பேருந்தை பயன்படுத்தி மலைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் மேற்பார்வையில் துணை ஆணையர் சரவணக்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் வழித்தடங்களிலும், கோயில் வளாகத்திலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கிடையே, கோயில் வளாகத்தில் இன்று பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படவில்லை என புகார்கள் எழுந்தன.
படிக்கட்டுகளில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் சீராக விரைவாக செல்ல வழிவகை செய்யவில்லை. படிக்கட்டு பாதைகளில் குடிநீர் கிடைக்காமல் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். அதேபோல், தடுப்பு அருகே அமைக்கப்பட்டிருந்த வயரில் மின்கசிவு ஏற்பட்டு பீளமேட்டைச் சேர்ந்த இளம் பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.