புதுச்சேரி: புதுச்சேரியில் தைபூசம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மிளகாய் இடித்து அபிஷேகம் செய்து நூதன வழிபாடு நடந்தது. அதேபோல் தீமிதித்து நேர்த்திகடன், ஏசி மெக்கானிக் போல் கடவுள் சிலைகளை வடிவமைத்திருந்தனர்.
புதுவையில் தைப்பூச விழா அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுவை ரயில் நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச பிரம்மோற்சவ விழா கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நாளான இன்று (பிப்.11) தைப்பூசத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
புதுவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். தொடர்ந்து அவர் சுவாமி தரிசனம் செய்தார். ஏராளமான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்தனர்.
மிளகாய் இடித்து அபிஷேகம்: புதுச்சேரி செட்டிப்பட்டு அருள்மிகு திருமுருகப் பெருமான் கோயில் 53-ம் ஆண்டு தைப்பூச விழாவையொட்டி பக்தர்கள் மீது உரல் வைத்து உலக்கையால் இடித்து மிளகாய் பொடி அபிஷேகம் செய்து நூதன வழிபாடு நடந்தது.
புதுச்சேரி செட்டிப்பட்டு அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத திருமுருகப் பெருமான் ஆலயத்தின் 53-ம் ஆண்டு தைப்பூச விழா வெகு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அலகு குத்தி ராட்டினம் போல் சுற்றி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
இந்த ஆலயத்தில் இதய நோய், சிறுநீரக பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதை உள்ளவர்களை தரையில் படுக்க வைத்து அவர்கள் மீது உரல் வைத்து, அதில் மஞ்சள் போட்டு பெண்கள் உலக்கையால் இடித்து நூதன வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கோயில் பூசாரியான தேவராசு என்பவருக்கு இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள், மற்றும் மிளகாய் பொடியால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த விழாவில் செட்டிப்பட்டு பகுதி மற்றும் புதுச்சேரியில் இருந்து பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமிக்கு நேர்த்திக் கடந்து செலுத்தினார்கள்.
தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்: புதுச்சேரி செல்லிப்பட்டு கிராமத்தில் பழமையான ஸ்ரீ சீர்செல்வமுருகன் கோயில் உள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு, புதுச்சேரியிலேயே செல்லிப்பட்டு சீர் செல்வ முருகன் கோயிலில் மட்டுமே ஆண்டுதோறும் தீமிதி உற்சவம் நடப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி இக்கோயிலில் 58-ம் ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு தீமிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஸ்ரீ செல்வ முருகன் சுவாமி மற்றும் காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தைப்பூச தீமிதி காவடி உற்சவம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 30 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். உலக நன்மை வேண்டி ஆண்டுதோறும் இந்த தீமிதி திருவிழா நடைபெறுவதாக கூறும் கிராம மக்கள் திருமண வரம், குழந்தை வரம் நிறைவேறும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை ஆண்டுதோறும் செலுத்தி வருவதாக கூறுகின்றனர்.
ஏசி மெக்கானிக் போல் ஜோடிக்கப்பட்ட முருகர், விநாயகர்: புதுச்சேரி அடுத்த கூடப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு நிலோத்பாலாம்பிகை உடனுறை நிமிலிஸ்வரர் ஆலயத்தில் அருள் தரும் சுப்ரமணியருக்கு தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதில் முருகர் மற்றும் விநாயகர் ஏசி மெக்கானிக் போல் ஜோடிக்கப்பட்டிருந்தனர். இதனை ஜோடித்த ஏசி மெக்கானிக் தினேஷ், தனது தொழில் அபிவிருத்தி செய்த கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் வகையில் நேர்த்திக்கடனாக ஜோடித்து இருந்தார். 50 கிலோ லட்டு, 25 கிலோ நெல்லிக்காய், 20 கிலோ கத்திரிக்காய் ஆகியற்றை கொண்டு மாலையாக தயாரித்து படையலிட்டனர்.
சுப்பிரமணிய பெருமானுக்கு வேல் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, ஜேசிபி, நெல் அறுக்கும் இயந்திரம், டாட்டா ஏஸ் போன்ற வாகனங்களை சடலிட்டு இழுத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.