சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னை, எழுகிணறு, வள்ளலார் வசித்த இல்லத்தில் சன்மார்க்க கொடியினை ஏற்றி வைத்து, அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் திருவருட்பா ஆறாம் திருமுறை பாராயணம் நிகழ்வில் கலந்து கொண்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்றவுடன் மனதிற்கும், எண்ணத்திற்கும் அமைதியை ஏற்படுத்துகின்ற சொற்றொடரை உலகுக்கு அளித்த அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் ஜோதிமயமான தைப்பூச திருநாளை முன்னிட்டு, அவர் பல்லாண்டு காலம் வாழ்ந்த இந்த இல்லத்தின் பராமரிப்பு பணிகளை நாங்கள் மேற்கொள்கிறோம் என்று சொன்னபோது, நாங்களே இதை செய்கிறோம் என்று சிதலமடைந்திருந்த இல்லத்தை புதுப்பித்து இன்றைக்கும் வள்ளலாரின் கொள்கை, கோட்பாடுகளை எடுத்துரைத்து இந்த இல்லத்தை சிறந்த முறையில் நிர்வகித்து வரும் அதன் பொறுப்பாளர் ஸ்ரீபதி அவர்களுக்கு தமிழக முதல்வர் அவர்கள் சார்பிலும் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பிலும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கருணாநிதி அவர்கள், வள்ளலார் வாழ்ந்த இந்தப் பகுதிக்கு வள்ளலார் நகர் என்ற பெயர் சூட்டியதோடு, அருகிலுள்ள பேருந்து நிலையத்திற்கு வள்ளலார் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டி பெருமை சேர்த்தார்கள். அவரது வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வள்ளலார் அவர்கள் பிறந்த அக்டோபர் 5ஆம் நாளை தனிப்பெரும்கருணை நாளாக அறிவித்ததோடு, வள்ளல் பெருமானார் தருமசாலை துவக்கிய 156-வது ஆண்டு தொடக்கம், வள்ளல் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற 200-வது ஆண்டு தொடக்கம், ஜோதி தரிசனம் காட்டுவித்த 152 வது ஆண்டு மூன்றையும் இணைத்து அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழாவாக கொண்டாடிட சமய சன்மார்க்க அன்பர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து சிறப்பாக கொண்டாடினார்.
முப்பெரும் விழாவின் முதல் நிகழ்வாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 05.10.2022 அன்று நடைபெற்ற தொடக்க விழாவில் “வள்ளலார் – 200” இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டு, 52 வாரங்களுக்கான விழாக்களில் முதல் வார நிகழ்ச்சிகளையும், ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் வள்ளலாரின் பெருமையை பறைசாற்றுகின்ற வகையில் 52 வாரங்கள் மாணவ, மாணவியருக்கு இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர் அன்னதானமும் வழங்கப்பட்டன, இதற்கான செலவினத் தொகை ரூ.3.25 கோடியை தமிழ்நாடு அரசு மானியமாக வழங்கியது.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 05.10.2023 அன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற “வள்ளலார் – 200” தொடர் அறநிகழ்வின் நிறைவு விழாவில்
ரூ.99.90 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான அரசாணையை வழங்கியதோடு, அதற்கான கட்டுமானப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு, வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் மூன்று நாட்களுக்கு தினமும் 10,000 சன்மார்க்க அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் வடலூர் திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், வள்ளலார் அவதரித்த மருதூர் இல்லம் ஆகியவற்றை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்று ஆன்றோர்கள் சான்றோர்களின் கொள்கைகளை, சமய நல்லிணக்கங்களை முன்னெடுத்து செல்வதால் தான் மதவெறி, இனவெறி போன்ற பாசிச சக்திகளுக்கு தமிழக மண்ணிலே இடமில்லை என்பதை நினைவூட்டுகின்ற, நிரூபிக்கின்ற வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு இந்து சமய அறநிலையத்துறை விழா எடுத்து வருகிறது.
வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு ஒருசில காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் மத நல்லிணக்கத்தை வலியுறுத்துகின்ற அவர்களின் கோட்பாடுகளை சிதைக்கின்ற வகையில், அப்படி ஒரு மையத்தை அமைத்து விட்டால் இங்கே மதத்தால் இனத்தால் மொழியால் மக்களை பிளவுபடுத்துகின்ற சக்திகளின் வலு குறையும் என்பதால் பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடுத்தார்கள். சென்னை உயர்நீதிமன்றம் ஏ, பி என இரண்டு பிரிவாக பிரித்து பி பிரிவு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி கட்டடப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார்கள், அங்கும் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் மேல் முறையீடு செய்து தற்போதைய நிலையே தொடர ஆணை பெற்றுள்ளார்கள். இது தொடர்பான வழக்கு வருகின்ற 28ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது, அப்போது மூத்த வழக்கறிஞர்களை வைத்து வழக்கை முறையாக நடத்தி வெற்றி பெற்று, நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்படும்.
வடலூரில் எந்த மரங்களும் வெட்டப்படவில்லை ஜோதி தரிசனம் அனைத்து பக்தர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக வளர்ந்துவிட்ட கிளைகளை தான் ஒழுங்குபடுத்தினோம். கிளைகளை வெட்டியதற்கு எந்த பக்தர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழர்களில் ஒரு சாரரை பிளவுபடுத்தி அரசியல் செய்து கொண்டிருக்கின்ற ஒரு சில சக்திகள் தான் அதை பூதாகரப்படுத்தினர். அதற்கு கடலூர் மண்டல இணை ஆணையர் அவர்கள் அதற்கு விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளிட்டார். மரங்கள் வெட்டப்படவில்லை ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் கொடுங்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார்