ராமேஸ்வரம்: தைப்பூச தெப்ப உற்சவத்தை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நாளை (புதன்கிழமை) நடை சாத்தப்படுகிறது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூசம் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 மணி வரையிலும் ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். மேலும் சாயரட்சை பூஜை மற்றும் கால பூஜைகளும் நடைபெறும்.
காலை 10 மணியளவில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி லெட்சுமணேசுவரர் கோயிலுக்கு எழுந்தருளுகின்றனர். பிற்பகல் தீர்த்தவாரியும் நடைபெறும். மாலை 7 மணிக்கு மேல் லெட்சுமண தீர்த்தத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ராமநாதசுவாமியும், பர்வதவர்த்தினி அம்பாளும் வலம் வருகின்றனர். பின்னர் தீபாராதனை நடைபெறுகிறது.
நடை சாத்தல்
முன்னதாக தெப்ப உற்சவத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை 10 மணியளவில் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் புறப்பாடானதும் கோயில் நடை சாத்தப்படும். அதன் பின்னர் கோயில் தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இரவு தெப்ப உற்சவத்துக்கு பின் சுவாமி, அம்பாள் ராமநாதசுவாமி கோயிலுக்கு திரும்பியதும் நடை திறக்கப்பட்டு அர்த்தசாம, பள்ளியறை பூஜைகள் நடைபெறும்.