கடலூர்: வடலூர் வள்ளலாரின் சத்திய ஞான சபையில் 154 வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
வடலூரில் திருவருட்பிரகாச வள்ளலார் சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டு 154 வது ஜோதி தரிசன விழாவையொட்டி, . இன்று (பிப்.11)முக்கிய விழாவான தைப்பூச ஜோதி தரிசன விழா சத்திய ஞான சபையில் நடைபெற்றது.
சத்தியஞான சபையில் காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை என்ற முழக்கத்துடன் ஜோதி தரிசனம் செய்தனர்.
தொடா்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, 12ம் தேதி காலை 5.30 மணி என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும். இதையடுத்து 13ம் தேதி வியாழன் கிழமை 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் சித்திவளாகத் திருஅறை தரிசனமும் நடைபெறும்.
தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி வடலூரில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து ஜோதி தரிசனம் செய்தனர். தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு சத்திய ஞான சபை, வள்ளலார் தெய்வ நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.