சண்முக நதி, ரயில் நிலையத்தில் இருந்து பழநிக்கு 3 நாள் இலவச பேருந்துகள்!


தைப்பூச் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக, பழநி சண்முக நதி, ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்துக்கு 3 இலவச பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா பிப்.5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வெளியூர்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில்களில் வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பழநி சண்முக நதி, இடும்பன் குளத்தில் புனித நீராடி விட்டு மலைக்கோயிலுக்கு செல்வது வழக்கம். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் சண்முகநதி சென்று வரவும், ரயில் நிலையம் செல்லவும் இலவசமாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, இன்று (பிப்.10) முதல் பிப்.12 வரை, பழநி பேருந்து நிலையம் - சண்முக நதி, சண்முக நதி - பேருந்து நிலையம் வரை 2 பேருந்துகள், ரயில் நிலையம் - பழநி பேருந்து நிலையம் வரை ஒரு பேருந்து என மொத்தம் 3 இலவச பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதே போல், வெளியூர் பக்தர்களுக்காக மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து பழநிக்கும், பழநியில் இருந்து மேற்கண்ட மாவட்டங்களுக்கும் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தற்காகலிக பேருந்து நிலையம்

பழநி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பழநி நகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி எதிர்புறம் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பிப்.12ம் தேதி வரை வெளியூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து சென்று வரும்.

இதேபோல், பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த வசதியாக கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் சாலை என 5 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

x