சென்னை: வில்லிவாக்கம் அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 10 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமானசொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இன்று (04.02.2025) சென்னை, வில்லிவாக்கம், அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.
சென்னை, வில்லிவாக்கம், அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமாக M.T.H. சாலை, சிவசக்தி காலனியில் உள்ள 17,625 சதுரடி பரப்பளவு கொண்ட வணிகமனையானது சக்தி எலக்ட்ரோ பிளேட்டிங் என்று நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்நிறுவனம் நீண்ட நாட்களாக வாடகைத் தொகை நிலுவையில் வைத்திருந்ததால், சென்னை மண்டலம் -2 இணை ஆணையர் கே.ரேணுகாதேவி அவர்களின் நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சென்னை உதவி ஆணையர் கி.பாரதிராஜா அவர்கள் முன்னிலையில், காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் ஆகியோரின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.10 கோடியாகும்.
இந்நிகழ்வின்போது வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) திருவேங்கடம், திருக்கோயில் அறங்காலர் குழுத் தலைவர் பாஸ்கர், அறங்காவலர்கள் நித்யானந்தம், வேலாயுதம், செயல் அலுவலர் அ.குமரேசன், மயிலாப்பூர் சரக ஆய்வாளர் உஷா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்’எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.