திருமலையில் இன்று ரதசப்தமி விழா


திருமலையில் இன்று ரதசப்தமி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

மினி பிரம்மோற்சவம் என்றழைக்கப்படும் ரதசப்தமி விழா திருமலையில் இன்று அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இதனையொட்டி, இன்று அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பர் பவனி வந்து அருள் பாலிப்பார்.

இதனை தொடர்ந்து, 9-10 மணி வரை சின்ன சேஷ வாகனத்திலும், 11-12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் 1-2 மணி வரை அனுமன் வாகனத்திலும் உற்சவர் மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இதன்பிறகு மதியம் 2 மணியில் இருந்து 3 மணி வரை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெறும். இதனை தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை கற்பக விருட்சவாகனத்திலும், மாலை 6 - 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும், நிறைவாக இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும் மலையப்பர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

ரதசப்தமியையொட்டி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேவஸ்தான கண்காணிப்பு படையை சேர்ந்த சுமார் 1000 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். கடந்த வைகுண்ட ஏகாதசியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்ததால் திருப்பதி தேவஸ்தானத்தினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். குறிப்பாக வாகன சேவை நடைபெறும் 4 மாட வீதிகளிலும், சக்கர ஸ்நானம் நடைபெறும் கோயில் குளத்திலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

x