திருவண்ணாமலை: ஆன்மிக பூமியான திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மினி பேருந்து சேவையைத் திராவிட மாடல் அரசு தொடங்க வேண்டும் எனப் பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ‘மலையே மகேசன்’ எனப் போற்றி வணங்கப்படும் தலம், திருவண்ணாமலை. நினைக்க முக்தி தரும் தலம் என்பதால் உலகம் முழுவதும் இருந்து பக்தர்களின் வருகை உள்ளது.
அண்ணாமலையாரைத் தரிசிக்கும் பக்தர்கள், 14 கி.மீ., தொலைவு உள்ள திரு அண்ணாமலையைக் கிரிவலம் சென்று தரிசிக் கின்றனர். அப்போது ஆதி அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள், திருநேர் அண்ணாமலையார் கோயில், ரமண ஆசிரமம், சேஷாத்திரி ஆசிரமம், யோகி ராம் சுரத்குமார் ஆசிரமம் உள்ளிட்ட தலங்களிலும் வழிபடுகின்றனர்.
கிரிவலம் செல்ல முடியாத வர்கள், திரு அண்ணாமலையை வலம் வர ஆட்டோக்களை பயன்படுத்தி, கிரிவலப் பாதையில் உள்ள சந்நிதிகளுக்கு சென்று தரிசனம் செய்கின்றனர். வசதியானவர்கள் கார்களில் சென்று வழிபடுகின்றனர்.
ஆட்டோ கட்டணத்துக்கு அஞ்சி, திரு அண்ணாமலையை வலம் வராமல், மலையை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுப் புறப்பட்டுச் செல்கின்றனர். ஒரு முறை 14 கி.மீ., தொலைவு உள்ள அண்ணாமலையை வலம் வருவதற்கு ஆயிரம் ரூபாயைக் கடந்து கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
பல ஆயிரம் பக்தர்கள்... வெளியூர்களிலிருந்து குழு வாக வரும் பக்தர்கள், 10 முதல் 15 பேர் வரை இணைந்து பயணித்து, கட்டணத்தைப் பிரித்துக் கொள்கின்றனர். இதனால், அவர்களுக்குக் கட்டண சுமை குறைந்துவிடுகிறது. அதே நேரத்தில் ஒரு குடும்பமாக வருபவர்களுக்குக் கட்டணம் என்பது பெரும் சுமையாக இருக்கிறது.
இதற்குத் தீர்வு காண, கிரிவலப் பாதையில் மினி பேருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, “தமிழகத்தில் ஆன்மிக தலங்களில், உலகப் பிரசித்தி பெற்றது திருவண்ணா மலை. இந்த தலத்துக்குத் தினசரி பல ஆயிரம் பக்தர்கள்வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலான பக்தர்கள், கிரிவலப் பாதையில் உள்ள கோயில் களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது விருப்பமாகும். நடக்க முடிந்தவர்கள், நடந்து செல்கின்றனர். ஆனால், நடக்க முடியாத நிலையில் உள்ள வர்கள், மனக்குறையுடன் வீடு திரும்புகின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் நடுத்தர மற்றும் ஏழை பக்தர்கள்.
இவர்களால், ஆட்டோ கட்டணத்தைக் கொடுக்க முடியாத பொருளாதார நிலையில் உள்ளனர். எனவே, கிரிவலப் பாதையில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 30 நிமிடம் அல்லது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மினி பேருந்து சேவையைத் தொடங்க தமிழக அரசு முன் வர வேண்டும். இதற்குக் குறைந்தபட்ச கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம்.
அனை வருக்குமான அரசு எனக் கூறும் திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்” என்றனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்றுக் கிரிவலப் பாதையில் மினி பேருந்து இயக்கப்பட்டால், பக்தர்கள் மட்டுமின்றி, கிரிவலப் பாதையில் உள்ள அடி அண்ணா மலை, கோ சாலை உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களும் பயன்பெறுவர்.
இக்கிராமங்களில் வசிக்கும் மக்கள், மருத்துவச் சிகிச்சை உட்பட அனைத்து தேவைகளுக்கும் இரு சக்கர வாகனம் அல்லது ஆட்டோக் களை பயன்படுத்துகின்றனர். மினி பேருந்து இயக்கப்பட்டால் பல நூறு கிராம மக்களுக்கும் உதவியாக இருக்கும்.
மினி பேருந்து இயக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி நடைபெற்ற போக்குவரத்து சீரமைப்பு கூட்டத்தில் வலியுறுத் தப்பட்டது. இதற்குப் பதிலளித்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத் துறை நிதியைப் பயன்படுத்த முடியாது என்றார்.
இதனால், திருவண்ணா மலைக்கு மினி பேருந்தைத் தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. அப்போதுதான், திருப்பதியைப் போன்று திருவண்ணாமலையை மாற்றும் அமைச்சர் எ.வ.வேலுவின் முயற்சியில் ஒரு மைல்கல்லை எட்டலாம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது என்பது நிதர்சனம்.