மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிப்.12-ல் நடை திறப்பு!


தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக வரும் 12-ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து தரிசனத்துக்கான முன்பதிவுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15-ம் தேதி நடை திறக்கப்பட்டது. டிச 26-ல் மண்டல பூஜை, ஜன.14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 20-ம் தேதி நடை சாத்தப்பட்டது. மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி, பந்தளம் மன்னர் பிநிதிநிதிகளிடம் கோயில் சாவியை ஒப்படைத்தார்.

இந்நிலையில் மாதாந்திர பூஜைக்காக வரும் 12-ம் தேதி மாலையில் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. ஆன்லைன் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். இதன்படி மாதாந்திர பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவுகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. மண்டல, மகரவிளக்கு காலங்களில் நெரிசல், நீண்ட நேரம் காத்திருப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும். ஆனால் மாதாந்திர பூஜையில் இதுபோன்ற நிலை இருக்காது என்பதால் ஐயப்ப பக்தர்கள் பலரும் தரிசனத்துக்காக ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

x