திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலுக்கு ரூ.55 கோடி மதிப்பில் மாற்று மலைப்பாதை அமைப்பது தொடர்பாக இன்று அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு விஷேச நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இக்கோயிலுக்கு, திருத்தணி-அரக்கோணம் சாலையிலிருந்து வர 1.40 கி.மீ., தொலைவுக்கு ஒரு மலைப்பாதை உள்ளது. அந்த பாதை வழியாகத்தான் வாகனங்களில் பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்த மலைப் பாதை மட்டும் போதாது. மற்றொரு மலைப்பாதை அமைக்கவேண்டும் என, பக்தர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன் விளைவாக, இந்துசமய அறநிலையத் துறையின் பரிந்துரையின் படி, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாற்று மலைப்பாதை அமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை கடந்த ஓராண்டாக ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் விளைவாக, திருத்தணி- சித்தூர் சாலையிலிருந்து சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு தரைப்பகுதியில் 900 மீட்டர், மலைப்பகுதியில் 1,100 மீட்டர் என 2 கி.மீ., தூரத்துக்கு ரூ.55 கோடி மதிப்பில் சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை முடிவெடுத்துள்ளது.
இச்சூழலில், இந்த மாற்று மலைப்பாதை அமைப்பது தொடர்பாக இன்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் மாற்று மலைப்பாதை அமைப்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு தெரிவிக்கையில், ''திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு மாற்று மலைப்பாதை வரும் டிசம்பருக்குள் கட்டாயம் அமையப்பெறும்'' என்றார்.
தொடர்ந்து, விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து, சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செல்ல இலவச பேருந்து சேவையை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிறகு, அவர் திருத்தணி கோட்டா ஆறுமுக சுவாமி கோயில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தவில், நாதஸ்வர இசை பயிற்சிப் பள்ளியை திறந்து வைத்து பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து, சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு, சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையிலிருந்து செல்ல 4.6 கி.மீ., தூர சாலையை விரிவுபடுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.