சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜை வழிபாடுகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்ட நிலையில், நேற்று காலையில் நடை அடைக்கப்பட்டது. அடுத்ததாக, பிப்ரவரி 12-ம் தேதி மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்படும் என்று, தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக, கடந்தாண்டு நவம்பர் 15-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் தொடர் வழிபாடுகளுக்குப் பின், டிசம்பர் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. பின்னர், நடை அடைக்கப்பட்டு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி நடை திறக்கப்பட்டு, உச்ச நிகழ்வான மகரவிளக்கு பூஜை ஜனவரி 14-ம் தேதி நடைபெற்றது. அன்று ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகரஜோதியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர், மகர சங்கராந்தி வழிபாடுகள் நடைபெற்றன. தற்போது, மகரவிளக்கு வழிபாடுகள் முற்றிலும் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தரிசனம் முடித்த பக்தர்கள் அனைவரும் அன்றிரவே சபரிமலையில் இருந்து பம்பைக்குத் திரும்பினர்.
மகரவிளக்கு பூஜை நிறைவடைந்து பக்தர்கள் கிளம்பிச் சென்ற பிறகு, பந்தளம் ராஜவம்ச பிரதிநிதிகளின் பிரத்யேக தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதன்பின்னரே கோயில் நடை அடைக்கப்படும். இதற்கான நடைமுறை நேற்று காலை தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, கிழக்கு மண்டபத்தில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, ராஜவம்ச பிரதிநிதிகளின் தரிசனம் நடைபெற்றது. இதையடுத்து, ஐயப்பன் அணிந்திருந்த திருவாபரணம் களையப்பட்டு திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிவித்து யோகநிலையில் ஐயப்பன் நிலை நிறுத்தப்பட்டார்.
தொடர்ந்து, ஹரிவராசனம் தாலாட்டுப் பாடலுடன் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோயில் நடையை அடைத்தார். பின்னர், குழுவினர் திருவாபரணப் பெட்டியை 18-ம் படி வழியே தலைச்சுமையாகக் கொண்டு சென்றனர். கோயில் நிர்வாக அதிகாரி விஜூநாத்திடம் சாவி ஒப்படைக்கப்பட்டு, மாத பூஜைக்கான பண முடிப்புகளும் வழங்கப்பட்டன.
ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட திருவாபரணம் அடங்கிய பெட்டி வரும் 23-ம் தேதி பந்தளம் அரண்மனையைச் சென்றடையும். இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு பூஜை வழிபாடுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக மாதாந்திர பூஜைக்காக பிப்ரவரி 12-ம் தேதி மாலை நடை திறக்கப்படும் என்று, தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.