வெண்காட்டீஸ்வரர் கோயிலில் நாளை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி


மதுராந்தகம்: கடப்பேரி பகுதியில் அமைந்துள்ள வெண்காட்டீஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்துள்ளதால், பிப்-10-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ள கோயில் நிர்வாகம், இதற்காக நாளை (ஜன. 19-ம் தேதி) பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த கடப்பேரி பகுதியில் பிரசித்தி பெற்ற மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், முதலாம் பராந்தக சோழன், கண்டராதித்த சோழன், முதல் குலோத்துங்க சோழன், விக்ரம பாண்டியன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளபட்டு கோயில் கட்டப்பட்டுள்ளதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கோயில் ராஜகோபுரம் உட்பட பல்வேறு சந்நிதிகள் பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டதால், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்பேரில், கடந்த 2023-ம் ஆண்டு கோயிலில் பாலாலயம் மேற்கொள்ளப்பட்டு உபயதாரர்கள் நிதியுதவி மூலம் ரூ.33 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், திருப்பணிகள் நிறைவுபெற்றுள்ளதால் பிப்-10-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக, நாளை (ஜன. 19-ம் தேதி) பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x