ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கையில் உள்ள மரகத நடராஜர் சிலைக்கு சந்தனக்காப்பு களையப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் பழமையான மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோயில் உள்ளது. இங்கு தனி சந்நிதியில் மரகத நடராஜர் எழுந்தருளியுள்ளார். 6 அடி உயரமுள்ள ஒற்றை பச்சை மரகதக் கல்லாலான நடராஜர் சிலைக்கு ஆண்டு முழுவதும் சந்தனம் பூசி பாதுகாக்கப்படுகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை, ஆருத்ரா தரிசன விழாவுக்கு முந்தைய நாள் மட்டும் சந்தனக்காப்பு களையப்பட்டு, அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா கடந்த 5-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
சந்தனக்காப்பைக் களைந்து அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
முன்னதாக, ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் சார்பில், அவரது குடும்பத்தினர் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவாசகம், சிவபுராணம் பாடப்பட்டு, மரகத நடராஜர் திருமேனியில் பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையப்பட்டு, பால், தயிர், இளநீர் உட்பட 33 வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது.
பின்னர், மூலிகை திரவியங்கள் பூசப்பட்ட நிலையில் நடராஜர் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலின் ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நேற்றிரவு கூத்தர் பெருமான் கல்தேர் மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மரகத நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிஷேகமும் நடைபெற்றது. இன்று அதிகாலை சூரிய உதயமாகும் நேரத்தில் (அருணோதய காலம்) மீண்டும் சந்தனம் சாத்தப்பட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெறும்.
மேலும், கூத்தர் பெருமான் வீதியுலா, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம், மாணிக்கவாசக சுவாமிகளுக்கு காட்சி தந்தருளல், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, வெள்ளி ரிஷப சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இன்று மாலை வரை மட்டுமே பச்சை மரகத நடராஜர் சந்நிதியில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதன்பிறகு நடை சாத்தப்படும்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இன்று உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருஉத்தரகோசமங்கைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.