திருவள்ளூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவபெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூரில் அமைந்துள்ளது 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வீரராகவபெருமாள் கோயில். 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயில் அஹோபில மடத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது.இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 5.20 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வீரராகவபெருமாள், ஸ்ரீதேவி. பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது கோயிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ’ கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டனர். பூஜைகள் முடிந்த பின்னர் காலை 6.30 மணிக்கு கோயிலை சுற்றி வலம் வந்து வெள்ளிக்கிழமை மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வீரராகவ பெருமாள் எழுந்தருளினார்.
அதே போல், பூந்தமல்லி திருகச்சி நம்பிகள் மற்றும் வரதராஜபெருமாள் கோயில், திருமழிசையில் உள்ள திருமழிசை ஆழ்வார் கோயில், ஜெகநாதபெருமாள் கோயில் மற்றும் திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோயில் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.