இன்று வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொண்டால் மகாபுண்ணியம். அப்படி இன்றைய தினம் விரதமே மேற்கொள்ளாமல் இருந்தால் கூட பலன் உண்டு. கோவிலுக்குச் செல்ல இயலாதவர்களுக்குக் கூட புண்ணியம் கிடைக்கும். ஏகாதசி நாளில் விரதம் அனுஷ்டிக்க முடியவில்லை, கோவிலுக்குச் செல்ல முடியவில்லை என்றெல்லாம் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை.
அதற்குப் பதிலாக ‘ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே…’ என்று 108 முறை இருக்கும் இடத்தில் இருந்தவாறே பாராயணம் செய்யுங்கள். உங்களுக்கு முழு பலன்களும் கிடைக்கும். வைகுண்ட ஏகாதசி நன்னாளில் இதை காலையில் கொஞ்சம், மதியத்துக்குப் பிறகு கொஞ்சம், மாலையில் கொஞ்சம் என்று முடியும் போதெல்லாம் முடிந்த அளவுக்குச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
இதைச் சொல்லச் சொல்ல வைகுண்ட ஏகாதசி எனும் புண்ணிய தினத்தின் பலன்கள் இரட்டிப்பாகி நமக்குக் கிடைக்கும். கிருஷ்ண பரமாத்மாவின் பேரருளைப் பெறலாம். விரதம் இருப்பவர்களில் சிறியவர்கள், வயதானவர்கள், உடல்நல பாதிப்புள்ளவர்கள் போன்றவர்களைத் தவிர மற்றவர்கள் முழுமையாக உபவாசம் இருப்பது நல்லது. ஏனெனில் ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் என உண்டு.
ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் ஐந்து. நம்முடைய மனமானது ஒன்று. ஆக, பதினொன்று. ஏகாதசி எனப்படும் பதினோராம் நாளில் இந்த 11 விஷயங்களையும் ஐக்கியப் படுத்தி பகவானை நினைப்பதும் துதிப்பதும் தரிசிப்பதும் மிகுந்த பலனைத் தந்தருளக் கூடியவை. ஆகவே ஏகாதசி விரதம் இருந்தால் நம் இல்லத்தில் இதுவரை இருந்த தரித்திரம் விலகும். ஐஸ்வர்யம் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீளலாம். பரமனின் திருவடியில் நற்கதி பெறலாம்!