நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் மார்கழி திருவிழா இன்று (ஜன.4) கொடியேற்றத்தடன் துவங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் 10 நாள் மார்கழி திருவிழா இன்று காலை துவங்கியது. கொடிமரத்தில் தெற்குமடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைத்தார். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்பி, குமரி மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஜன.6ம் தேதி இரவு 10.30 மணிக்கு சுவாமி வீதி உலாவின்போது கோட்டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை முருகன் ஆகியோர் தங்கள் தாய், தந்தையருக்கு நடைபெறும் விழாவை காணவரும் பாரம்பரியமிக்க “மக்கள்மார் சந்திப்பு” நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஆண்டு தோறும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரம் கோயில் முன்பு கூடுவது வழக்கமாகும்.
9-ம் திருவிழாவான 12-ம் தேதி காலை 7.45 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் தாணுமாலயன் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய 3 தேர்கள் வலம் வரும். நள்ளிரவு 12 மணிக்கு சப்தவர்ண காட்சி நடைபெறுகிறது. விழா நிறைவு நாளான 13-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி வீதியுலாவும், இரவு 9 மணிக்கு சுவாமிக்கு ஆராட்டும் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு மெல்லிசை, சமய சொற்பொழிவு, பரதநாட்டியம், மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.