திருப்பூர்: திருப்பூர் அருகே சாலை வசதி இல்லாததால், ரயில் தண்டவாளம் வழியாக எடுத்து செல்லப்பட்ட பெண் சடலத்தை மின்மயானத்தில் எரியூட்டிய நிலையில், மக்கள் தங்களது வசிப்பிடம் குறித்து தெரிவித்தது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சி வஞ்சிபாளையம் சென்னிமலைக்கவுண்டன்நகர் உள்ளது. இங்கு 75 குடும்பங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். தனியார் வீட்டு மனைகளை விலைக்கு வாங்கி பலரும் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே தடத்தை பாதையாக காண்பித்து இடத்தை விற்றதால், இன்றைக்கு பாதையின்றி மக்கள் அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த லட்சுமி (60) என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று (டிச.31) உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள மின் மயானத்துக்கு எரியூட்ட எடுத்துச்செல்ல பாதையின்றி இருந்ததால், அந்த பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சடலத்துடன் கீழிறங்கி அங்குள்ள ரயில்வே கூட்செட்டுக்கு சென்று சடலத்தை வைத்து, வாகனத்தில் எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “ரயில்வே இடத்தை பாதையாக காண்பித்து விற்று மோசடி செய்ததால், இன்றைக்கு பல குடும்பங்கள் பாதையின்றி தனித்தீவு போல் வாழ்ந்து வருகிறோம். இன்றைக்கு நல்லது, கெட்டது என்றால் உடனடியாக எங்கள் பகுதிக்கு வந்து செல்ல முடியாது.
தற்போது உயிரிழந்த பெண்ணின் சடலத்தை எடுத்துக்கொண்டு, தண்டவாளத்தில் இறங்கி வந்தோம். அப்போது ரயிலும் வந்தது. ரயிலின் சத்தம் கேட்டு சடலத்துடன் அந்த பகுதியில் உயிர் பயத்துடன் ஒதுங்கி நின்றோம். எங்களுக்கு பாதைவசதி கோரி பல ஆண்டுகாலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இன்றைக்கு பாதையின்றி இறந்தவரின் இறுதிக் காரியங்களை கூட நிம்மதியாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் பாதை வசதி செய்து தர வேண்டும்” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் வஞ்சிபாளையம் கிளை செயலாளர் கு.ஹனிபா கூறும்போது, “கடந்த 3 ஆண்டு காலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதை வசதி செய்து தரக்கோரி மனு அளித்து போராடி வருகிறோம். ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முற்றுகை என பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தோம். ஆனால் இன்றைக்கு பாதை வசதி செய்து தரப்படவில்லை. எங்கள் குடியிருப்பு பகுதியில் சாமந்தங்கோட்டைக்கு சென்றுதான் திருப்பூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும். அவசரத் தேவையென்றால் ரயில் தண்டவாளத்தில் இறங்கியும், முள்காட்டில் இறங்கியும் தான் செல்ல வேண்டி உள்ளது. இது அனைத்து நேரங்களுக்கும் பாதுகாப்பானது இல்லை. வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், மருத்துவமனைக்கு செல்லும் முதியவர்கள் என பல்வேறு தரப்பும் இன்றைக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
வஞ்சிபாளையம் - சாமந்தங்கோட்டைக்கு சென்னிமலைக்கவுண்டன்பாளையம் நகர் வழியாக செல்ல போதிய சாலைகளும் இல்லை. இந்த சாலை பணிக்காக, ரூ. 55 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு, நீலகிரி தொகுதி எம்.பி., ராசா வந்தபோது சாலை பணிகளை துவங்கி வைத்தார். முதல்கட்டமாக ரூ.7 லட்சமாக நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பணிகள் முறையாக நடக்காததால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக பணிகள் நடக்கவில்லை. இன்றைக்கு மக்களின் நிலையை பரிதாப நிலையை கருதி, சாலை வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும்” என தெரிவித்தார்.