இன்று மாலை 4 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து ஆழிக்குண்டத்தில் ஜோதி ஏற்ற உள்ளார். பின்னர் பூஜைகள் எதுவுமின்றி இன்று இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நாளை அதிகாலை 3 மணி முதல் சிறப்பு வழிபாடுகள் தொடங்கும். சபரிமலையில் மீண்டும் நடை திறக்கப்பட உள்ளதையொட்டி சந்நிதானம் உட்பட கோயில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தன. மேலும், சத்திரம், அழுதகடவு, முக்குழி வனப் பாதைகளில் பக்தர்கள் இன்று காலை 7 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர். முக்கிய நிகழ்வான மகர விளக்கு பூஜை வரும் ஜனவரி 14ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.