வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் நாளை தொடக்கம்: களை கட்டியது ஸ்ரீரங்கம் கோயில்


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு மணல் வெளியில் அலங்கரிக்கப்பட்டுள்ள பந்தல். படம்: ர.செல்வமுத்துகுமார்.

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் திங்கட்கிழமை (டிச.30) தொடங்குகிறது.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நிகழாண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் திங்கட்கிழமை தொடங்குகிறது.

பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா டிச.31 தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 7.45 மணிக்கு நம் பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைவார். காலை 8.30 மணி முதல் பகல் 12 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள்.

இரவு 7 மணிக்கு அர்ஜூன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். பகல் பத்தின் முதல் நாளில் இருந்து மூலவர் ரங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.

பகல்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான வரும் 2025ம் ஆண்டு ஜன.9-ம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருள்வார்.

ஜன.10-ம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு பக்தர்களுடன் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் கடப்பார்.

இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்று இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். ஜன.11-ம் தேதி முதல் ஜன.15-ம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 16-ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

ராப்பத்து 8-ம் திருநாளான ஜன.17-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. ஜன.18-ம் தேதி வழக்கம்போல் பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும், ஜன.19-ம் தேதி காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும்.

ஜன.10-ம் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

ஜன.16 நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், ஜன.17 திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், ஜன.19 தீர்த்தவாரி கண்டருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஜன.20 நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி பெவிழா நிறைவுபெறுகிறது.

இவ்விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம், மணல்வெளி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, கோயில் கோபுரங்கள் மின்விளக்குகளால் ஜொலிக்கிறது. பக்தர்கள் வசதிக்காக பல்வேறு இடங்களில் குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்புக்காக ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாஸ் மண்டபம் அருகில் புறகாவல் நிலையத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினி இன்று மாலை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: வைகுண்ட ஏகாதாசி பெருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிவார்கள். விழாவுக்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளூர், வெளியூரைச் சேர்ந்த 2,000 போலீஸார் பணியமர்த்தப்பட உள்ளார்கள். பகல்பத்து மற்றும் ராப்பத்தின் போது திருச்சி மாநரைச் சேர்ந்த 362 போலீஸார் சுழற்சி முறையில் (2 ஷிப்ஃப்ட்) பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது.

குற்றவாளிகளை அடையாளும் காணும் சிசிடிவி கேமிரா: பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கோயிலின் உட்புறத்தில் 123, வெளிப்புறத்தில் 110 சிசிடிவி கேமிராக்கள் மற்றும் காவிரி பாலம், அம்மா மண்டபம், ராஜகோபுரம், தேவி தியேட்டர் உள்ளிட்ட பகுதிகள் என மொத்தம் 333 கேமராக்கள் பொருத்தப்பட்டு அதை புறக்காவல் நிலையத்தில் இருந்தே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒலிப்பெருக்கி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அவ்வப்போது அறிவிப்பு செய்து தகவல் தெரிவிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோயிலின் உட்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள 123 சிசிடிவி கேமராக்களிலும் குற்றவாளிகளின் புகைப்படங்களை முகம் அடையாளம் காணும் மென்பொருள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. யாரேனும் குற்றவாளிகள் அங்கு நடமாடினால் மேற்கண்ட கேமராவானது குற்றவாளிகளின் முகங்களை ‘ஸ்கேன்’ செய்து மென்பொருளில் பொருத்தப்பட்டுள்ள குற்றவாளிகளின் புகைப்படங்களுடன் ஒப்பீடு செய்து காவல்துறைக்கு எச்சரிக்கை ஒலியை ஏற்படுத்தும்.

பரமபத வாசல் திறப்பு நாளன்று 24 மணிநேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்’ என்றார். அப்போது காவல் துணை ஆணையர் செல்வகுமார், ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் கிருஷ்ணன், கோயில் இணை ஆணையர் மாரியப்பன், சுந்தர்பட்டர் ஆகியோர் உடனிருந்தனர்.

x