கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவில் சைவ ,வைணவ சமய ஒற்றுமை வலுபெற வேண்டி கருடாழ்வார் சுவாமி முன்பு தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் 108 அகல் விளக்கு தீபம் ஏற்றி, நடராஜர் சன்னதியில் வழிபாடு செய்தனர்.
தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் சைவ, வைணவ சமய ஒற்றுமையை வலுப்பெற வேண்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவில் எதிரி உள்ள கொடிமரப் பகுதியில் கருடாழ்வார் சன்னதியில் 108 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது, அதனைத் தொடர்ந்து நடராஜர் சன்னதியில் சிறப்பு அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். அதன்படி இன்று(டிச.29) காலை 11 மணியளவில் தெய்வீக பக்தர்கள் பேரவையினர் நடராஜர் கோவில் கீழ சன்னதியில் திரண்டனர்.
இதனையடுத்து தெய்வீக பக்தர்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் தலைவர் ஜெமினி எம்.என். ராதா தலைமையில் குமராட்சி ரெங்கநாதன், செல்வக்குமார், சம்பந்த மூர்த்தி, பாலகிருண்ணன், ஜெயசீலா உள்ளிட்ட பலர் ஊர்வலமாக சைவ, வைணவ ஒற்றுமை ஓங்க வேண்டும் என்று முழக்கமிட்டபடியே நடராஜர் கோவிலுக்குள் சென்று தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரியே உள்ள கொடிமரப் பகுதிக்கு சென்றனர். பின்னர் அப்பகுதியில் உள்ள கருடாழ்வார் சன்னதியில் 108 அகல் விளக்கு ஏற்றினார். தொடர்ந்து கோவிந்தராஜ பொருள் சன்னிதிக்கு சென்று சிறப்பு அர்ச்சனை செய்தனர்.
தொடர்ந்து நடராஜர் கோயில்கள் சிற்றம்பல மேடை(கனகசபையில்) சாமி தாரிசனம் செய்துவிட்டு சென்றனர். சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரம் ரமேஷ்பாபு, அண்ணாமலை நகர் அம்பேத்கர் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இது குறித்து தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத்தலைவர் ஜெமினி எம்என்.ராதா கூறுகையில், ''சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி கருடாழ்வார் சன்னிதியில் 108 அகல் தீபம் ஏற்றப்பட்டது. கோவிந்தராஜ பெருமாள், நடராஜர் சன்னிதியில் சாமி தரிசனம் செய்தோம். கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் உள்ள கொடி மரத்தை மாற்ற தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கோவிந்த ராஜ பெருமாளுக்கு பிரமேற்வம் நடத்தவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிற்றம்பல மேடையில்(கனகசபை) ஏறி சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் ரூ.100, ரூ. 200 என்று வாங்கி கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. தீட்சிதர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவாதால் தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி அகல்தீபம் ஏற்றி சாமி வழிபாடு செய்தோம்'' என்றார்.