மண்டல பூஜை நிறைவு: சபரிமலை சந்நிதானம் முழுவதும் தூய்மைப் பணி மும்முரம் 


சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக சந்நிதானப் பகுதிகளை தயார்செய்யும் வகையில்  நடைபெற்று வரும் தூய்மைப்பணி.

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவடைந்து நேற்று நடை சாத்தப்பட்டது. இந்நிலையில் மகர பூஜை வழிபாட்டுக்காக சந்நிதானத்தை தயார் செய்யும் வகையில் சுத்திகரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சபரிமலையில் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கி நேற்று (டிச.26) வரை மண்டல காலத்துக்கான தொடர் வழிபாடுகள் நடைபெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர். இந்நிலையில் டிச.26-ம் தேதி மண்டல பூஜையுடன் கோயில் நடை சாத்தப்பட்டது. அடுத்த கட்டமாக ஜன.14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக வரும் 30-ம் தேதி மாலை நடைதிறக்கப்படும்.

இடைப்பட்ட நாளில் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ள தேவசம்போர்டு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணி இன்று காலையில் தொடங்கியது. முதற்கட்டமாக அப்பாச்சிமேடு முதல் சந்நிதானம் வரை சுத்தம் செய்யும் பணி நடைபெறறது.

பெரிய நடைப்பந்தல், 18-ம் படிவளாகம், மாளிகைப்புறத்தம்மன் கோயில் சந்நிதானம், இரும்பு நடைப்பாலம், அன்னதான மண்டப சுற்றுப்பகுதி, ஆயுர்வேத மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன. பின்பு நீரை பீய்ச்சி அடித்து குறுமணல்கள், தூசிகள் அகற்றப்பட்டன. இதில் பல்வேறு துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். சந்நிதான சிறப்பு காவல் அதிகாரி பி.கிருஷ்ணகுமார் தலைமையில் இப்பணி நடைபெற்று வருகிறது.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், ''மண்டல பூஜை நிறைவடைந்ததால் சுத்திகரிப்பு பூஜை பணிகள் நடைபெற்று வருகிறது. எதிர்மறை ஆற்றல்கள், அசுத்தங்கள் மற்றும் தோஷங்களை அகற்றுவதற்காக சுத்திகரன் எனும் வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பூக்கள், தூபம், தீபம், மஞ்சள், சந்தனம், புனித நீர் தெளித்து பூஜைகள் செய்யப்படும். இரண்டு நாட்களில் இப்பணிகள் முடிந்து மகரபூஜைக்கு நடை திறக்க சந்நிதானம் தயார் நிலையில் வைக்கப்படும்'' என்றார்.

x