சபரிமலையில் வரும் 26-ம் தேதி ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நிறைவு பெற உள்ளது. இதையொட்டி, தங்க அங்கி நேற்று ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக ரதத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவ. 16-ம் தேதி முதல் மண்டல கால வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்வான மண்டல பூஜை வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று ஐயப்ப சுவாமிக்கு 420 பவுன் கொண்ட தங்க அங்கி அணிவித்து வழிபாடு நடைபெறும்.
இதற்காக ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலின் காப்பறையிலிருந்து தங்க அங்கி நேற்று ஊர்வலமாக ரதத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு அளித்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். நேற்று இரவு ஓமல்லூர் ரக்தகண்டஸ்வாமி கோயிலில் ரதம் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு மீண்டும் ரதம் புறப்பட்டு, கொடுந்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில், அடூர் உள்ளிட்ட கோயில்களை கடந்து செல்லும். இந்த ஊர்வலம் வரும் 25-ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு பம்பையை அடையும். அங்கிருந்து தலைச்சுமையாக ஆபரணப் பெட்டி ஐயப்பன் சந்நிதானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
தீபாராதனைக்குப் பிறகு மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பின்பு இரவில் தங்க அங்கி காப்பறையில் பாதுகாக்கப்படும். வரும் 26-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, மண்டல பூஜை நடைபெறும்.