கரூர் வெண்ணெய்மலை கோயில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல்: அறநிலையத்துறை நடவடிக்கை


கரூர்: கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை சீல் வைத்தது.

கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் சுமார் 500 ஏக்கர் அப்பகுதியில் உள்ளன. இவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயிலிடம் நிலங்களை ஒப்படைக்கும் நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக அப்பகுதியில் இது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என அறிவிப்புகள் வைக்கப்பட்டு, 34 இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 7 இடங்களுக்கு சீல் வைக்க நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், கடந்த நவ. 5ம் தேதி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகம், நவ. 6ம் கோயில் அலுவலகம் மற்றும் கோயிலை முற்றுகையிட்டு அர்ச்சகரை கோயிலுக்குள் அனுமதிக்காமலும் அங்கேயே சமைத்து சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கைகளை ஒத்தி வைக்கப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கைகளை தொடரலாம் என நீதிமன்றம் தெரிவித்த நிலையில் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு இன்று (டிச. 21ம் தேதி) கரூர் வெண்ணெய்மலையில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை இந்து சமய அறநிலையத்துறை தொடங்கியது.

இதனையொட்டி ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த் தலைமையில் டிஎஸ்பி செல்வராஜ், இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், முத்துகுமார், செந்தூர்பாண்டி, சப் இன்ஸ்பெக்டர்கள் போலீஸார், ஆயுதப்படையினர், குற்றப்பிரிவு போலீஸார் என 125 பேர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணிகாந்தன் தலைமையில் அறநிலையத்துறையினர், வருவாய்த்துறையினர், மின் வாரிய ஊழியர்கள் சீல் வைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

சீல் நடவடிக்கைகள் குறித்து அறிந்த வெண்ணெய்மலையில் கடை வைத்திருந்த ஆக்கிரமிப்பாளர்கள் இரு கடைகளின் ஷட்டர்களை அகற்றிவிட் டதால் கடைகள் திறந்த நிலையில் இருந்தன. இதனால் கடைகளில் தகரம் கொண்டு அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. மேலும் ஷட் டர்களுடன் இருந்த 4 கடைகளுக்கு பூட்டு போட்டும் மொத்தம் 6 கடைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீல்கள் வைக்கப்பட்டன. கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் ஆங்காங்கே திரண்டு நின்றனர்.

x