செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஆன்மிக நகரமாக விளங்கி வருகிறது. நகரைச் சுற்றிலும் 15-க்கும் மேற்பட்ட தீர்த்த குளங்கள் அமைந்துள்ளன. இவை பேரூராட்சி மற்றும் வேதகிரீஸ்வரர் கோயில் நிர்வாக பராமரிப்பில் உள்ளன. இந்நிலையில், தாழக்கோயில் எனக் கூறப்படும் பக்தவச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்தின் எதிரே லட்சுமி தீர்த்தம் எனப்படும் குளம் ஒன்று அமைந்துள்ளது.
இக்குளம் பேரூராட்சி மற்றும் அறநிலையத்துறை கோயில் நிர்வாகம் என எந்த அரசுத் துறையின் பராமரிப்பில் வருகிறது என்ற குழப்பம் பல ஆண்டுகளாக நீடித்து வருவதாக தெரிகிறது. இதனால், குளத்தின் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. கோடை வெப்பத்திலும் தண்ணீர் நிரம்பி காணப்படும் குளத்தின் கரையில் உள்ள முட்புதர்களை அகற்றி, பராமரிக்க பேரூராட்சி முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, உள்ளூர் வாசிகள் கூறியதாவது: கடந்த பல ஆண்டுகளாக லட்சுமி தீர்த்த குளம் முட்புதர்கள் மண்டி சீரழிந்து வருகிறது. குளத்தின் கரையில் உள்ள முட்புதர்களின் மறைவில் மது அருந்துதல், கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. இக்குளத்தின் கரையை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அதனால், நகரின் தூய்மை மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை கருத்தில் கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி லட்சுமி தீர்த்த குளத்தை சீரமைக்க வேண்டும். கரையை பலப்படுத்தி நடைபயிற்சிக்கான நடைபாதை அமைத்து தரலாம் என்றனர்.
இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவலர் யுவராஜ் கூறியதாவது: லட்சுமி தீர்த்த குளத்தை சீரமைப்பதற்காக, ரூ.1.35 கோடியில் திட்டமதிப்பீடு தயாரித்து, அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் ஒப்புதல் வழங்கக் கோரி அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தந்திரிகுளம் ரூ.60 லட்சம், நட்டுவனார் குளம் ரூ.70 லட்சம் மதிப்பில் சீரமைப்பதற்காக அரசின் ஒப்புதலுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், வாணியம் தாங்கள் ஏரி, மங்கலம் பெரிய ஏரி ஆகியவற்றை நமக்கு நாமே திட்டத்தில் சீரமைக்க, திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்ததும், லட்சுமி தீர்த்த குளம் உட்பட மேற்கண்ட நீர் நிலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும் என்றார்.