நாகர்கோவில்: மார்கழி 1-ம் தேதியான இன்று (டிச.16) கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக ஐய்யப்ப பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் சூரிய நமஸ்காரம் செய்து சரணகோஷம் எழுப்பினர்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் அதிகாலை சூரிய உதயம், மாலையில் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடி வருகின்றனர். தற்போது சபரிமலை ஐய்யப்ப சுவாமிகள் சீசன் என்பதால் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
கார்த்திகை மாதம் முடிந்து இன்று மார்கழி பிறந்தது. மார்கழி மாதத்தின் முதல் சூரிய உதயத்தை பார்ப்பதற்கு இன்று அதிகாலையிலேயே கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமம், பகவதியம்மன் கோயில் வளாகம், கடற்கரை சாலை, காட்சி கோபுரம், வெங்கடாசலபதி கோயில் கடற்கரை வளாகம் ஆகியவற்றில் திரண்டனர்.
மார்கழி பனிக்கு மத்தியில் காலை 6,30 மணியளவில் கடலில் இருந்து எழுந்து வந்ததை போல் தென்பட்ட சூரிய உதயத்தை பார்த்து ஐய்யப்ப பக்தர்கள் உற்சாகத்தில் சரணகோஷம் எழுப்பினர். அவர்கள் சூரியனை நமஸ்காரம் செய்து வழிபட்டனர். மார்கழி பிறந்ததை முன்னிட்டு வழக்கத்தைவிட அய்யப்ப பக்தர்கள் கூட்டம் கன்னியாகுமரியில் அதிகமாக காணப்பட்டது. குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுசீந்தரம் தாணுமாலய சுவாமி கோயில், நாகர்கோயில் நாகராஜா கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில், திற்பரப்பு அருவி ஆகியவற்றில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.