தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நாளை (16-ம் தேதி) முதல் பூஜை காலங்கள் மாற்றப்பட்டுள்ளது.
தமிழ் மாதங்களில் தெய்வீக மாதமாக மார்கழி கருதப்படுகிறது. மார்கழி மாதங்களில் கோயில்கள் அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கின்றன. மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் பூஜை காலங்கள் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’தமிழ் மாதமான மார்கழி நாளை (16-ம் தேதி) தொடங்கி ஜனவரி 13-ம் தேதி நிறைவு பெறுகிறது.
இந்த நாட்களில் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், காலை 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், காலை 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கிறது. பின்னர் மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடக்கிறது. பின்னர் கோயில் நடை திருக்காப்பிடப்படும். அதேபோல் பிரதோஷ நாட்களான டிச.28-ம் தேதி, ஜன.11-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜன.13-ம் தேதி மட்டும் கோயில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
திருப்பாவை திருவெம்பாவை: திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருப்பாவை-திருவெம்பாவை பண்ணோடு பாடல்கள் பாட பயிற்சி வகுப்புகள் நாளை (16-ம்தேதி) முதல் ஜனவரி 4-ம் தேதி வரை 20 நாட்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திருச்செந்தூர் சிவன் கோயிலில் நடக்கிறது’ என தெரிவித்துள்ளார்.