கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தி பரவசம்: திரு அண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்பட்டது மகா தீபம்


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் நேற்று மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது.படம் : வி.எம்.மணிநாதன்.

திருவண்ணாமலை: ​திரு​வண்ணா​மலை​யில் 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சி​யில், பக்தர்களின் `அண்ணா​மலை​யாருக்கு அரோகரா' என்ற முழக்​கத்​துடன் நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்​பட்​டது.

ஞான தபோதனரை வாவென்​றழைக்கும் திரு​வண்ணா​மலை​யின் சிறப்பு என்பது கார்த்திகை தீபத் திரு​விழா ஆகும். உலக பிரசித்தி பெற்​ற இவ்விழா, காவல் தெய்​வமான துர்க்கை அம்மன் உற்சவத்​துடன் கடந்த 1-ம் தேதி தொடங்​கியது. பிடாரி அம்மன், விநாயகர் உற்சவங்கள் அடுத்​தடுத்த நாட்​களில் நடைபெற்றன.
பின்னர், மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்​தில் கடந்த 4-ம் தேதி கொடியேற்​றப்​பட்​டதும், 10 நாள் உற்சவம் ஆரம்ப​மானது. முக்கிய நிகழ்வு​களில் ஒன்றாக, கடந்த 10-ம் தேதி மகா தேரோட்டம் நடைபெற்​றது. விநாயகர், வள்ளி,தெய்​வானை சமேத முரு​கர், உண்ணா​முலை அம்மன் சமேத அண்ணா​மலை​யார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்​வரர் ஆகியோர் சிறப்பு அலங்​காரத்​தில் எழுந்​தருளி தனித்தனி தேர்​களில் பவனி வந்தனர்.

விழா​வின் முக்கிய நிகழ்​வாக, கார்த்திகை தீபத் திரு​விழா நேற்று கோலாகலமாக நடைபெற்​றது. மூலவர் சந்நி​தி​யில் அதிகாலை 4 மணியள​வில், வேத மந்திரங்களை முழங்கி, பரணி தீபத்தை சிவாச்​சா​ரி​யார்கள் ஏற்றினர். ஏகன், அநேகன் தத்து​வத்தை உலகுக்கு எடுத்​துரைத்து, பஞ்சபூதங்​களு நானே என்பதை இறைவன் உணர்த்து​கின்​றார். பின்னர், கோயி​லில் உள்ள பிரம்​மதீர்த்த குளத்​தில் தீர்த்​தவாரி நடைபெற்றது.

இதையடுத்து, தங்கக்​ கொடிமரம் முன்பு தீப தரிசன மண்டத்​தில் மாலை 4 மணி முதல், சிறப்பு அலங்​காரத்​தில் பஞ்சமூர்த்திகள் எழுந்​தருளினர். அதன்​பிறகு, ஆண் - பெண் சமம் என்ற தத்து​வத்தை உலகுக்கு உணர்த்த, உமைய​வளுக்கு தனது இடபாகத்தை அளித்து, ‘அர்த்​தநாரீஸ்​வரர்’ ஆக அண்ணா​மலை​யார் எழுந்​தருளினார். அப்போது இறைவன், ஆனந்த தாண்​ட​வ​மாடி, பக்தர்களை பக்தி பரவசத்​தில் ஆழ்த்​தினார். இந்நிகழ்வு, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். பின்னர், தங்கக்​ கொடிமரம் முன்பு உள்ள அகண்​டத்​தில் தீபச்​சுடர் ஏற்றப்​பட்​டது.

11 நாட்​களுக்கு தீப தரிசனம்: இதைத்​ தொடர்ந்து, ‘மலையே மகேசன்’ என போற்றி வணங்​கப்​படும் 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணா​மலை​யின் உச்சி​யில் பருவதராஜகுல வம்சத்​தினர் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றினர். அப்போது ஜோதியாக காட்சி கொடுத்த அண்ணாமலை​யாரை மேகக்​கூட்டம் வணங்​கியபடி சென்​றது. `அண்ணா​மலை​யாருக்கு அரோகரா' என பக்தர்கள் பக்தி முழக்​கமிட்டு, மகா தீபத்தை தரிசித்தனர். மகா தீபம் ஏற்றப்​பட்​டதும், கோயி​லின் நவ கோபுரங்கள் மற்றும் பல கட்டிடங்கள் மின்னொளி​யில் ஜொலித்தன. வாண வேடிக்கைகள் விண்​ணில் பாய்ந்தன. கோயில், வீடு​களில் அகல் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபட்​டனர். 10 நாட்கள் விரதம் இருந்த பக்தர்​கள், தேனும் - தினை மாவும் உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்​தனர். ஜோதி வடிவமாக அண்ணா​மலை​யார் காட்சி கொடுத்​த​தால், கோயில் நடை அடைக்​கப்​பட்​டது. மகா தீப தரிசனத்தை தொடர்ந்து 11 நாட்​களுக்கு காணலாம்.

25 லட்சம் பக்தர்கள் கிரிவலம்: கார்த்திகை தீபத் திரு​விழாவையொட்டி, ‘மலையே மகேசன்’ என அழைக்​கப்​படும் 14 கி.மீ. சுற்றளவு உள்ள திரு அண்ணா​மலையை நேற்று அதிகாலை​யில் இருந்து பக்தர்கள் கிரிவலமாக சென்​றனர். மழையின் தாக்​க​மும் சற்று தணிந்​திருந்​த​தால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்​தனர். மாலை 4 மணிக்கு பிறகு, பக்தர்​களின் எண்ணிக்கை கிடு​கிடுவென அதிகரித்​தது. விடிய விடிய 25 லட்சத்​துக்​கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் சென்​றனர். கார்த்திகை தீபத் திரு​விழாவை தொடர்ந்து, இன்று பவுர்​ணமி, நாளை ஞாயிற்றுகிழமை என்ப​தால் பக்தர்கள் வருகை தொடரும்.

3 நாட்கள் தெப்ப உற்சவம்: 10-ம் நாள் உற்சவமான தங்க ரிஷபவாகனங்களில் நேற்று இரவு பஞ்சமூர்த்திகள் மாட வீதி​யில் பவனி வந்தனர். ஜோதி பிழம்பாக காட்சி கொடுத்த அண்ணா​மலை​யாரை குளிர்விக்​கும் வகையில், ஐயங்​குளத்​தில் இன்று (14-ம் தேதி) முதல் 3 நாட்​களுக்கு தெப்​ப உற்​சவம் நடை​பெறவுள்​ளது. இதற்​கிடை​யில், உண்ணா​முலை அம்​மன் சமேத​ராய் அண்ணா​மலை​யார் கிரிவலம் செல்​லும் நிகழ்வு நடை​பெறும். 17 நாட்​கள் நடை​பெறும் ​கார்த்திகை தீபத் ​திரு​விழா, சண்​டிகேஸ்​வரர் உற்​சவத்​துடன் வரும் டிச. 17-ம்​ தே​தி நிறைவு பெறவுள்​ளது

x