ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வைர கிரீடம் வழங்கிய பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன்


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உற்சவரான நம்பெருமாளுக்கு, பரத நாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேன் நேற்று வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கினார். கோயில் இணை ஆணையர் மாரியப்பன், அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் அதைப் பெற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து ஜாகீர் உசேன் கூறியது: அரை அடி உயரம் கொண்ட இந்த கிரீடம் 3,160 கேரட் மாணிக்கக் கல், 600 வைரம் மற்றும் மரகதக் கற்களை கொண்டு, 400 கிராம் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் இருந்து ஒற்றை மாணிக்கக் கல் கொண்டு வரப்பட்டு, கிரீடம் வடிவில் குடைந்து இது தயாரிக்கப்பட்டது. இதை தயாரிக்க 8 ஆண்டுகளாகின. ஒற்றை மாணிக்கக் கல்லால் செய்யப்பட்ட முதல் வைரக் கிரீடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறப்பால் நான் முஸ்லிம் மதத்தவராக இருப்பினும், ரங்கநாதர் மீது எனக்குள்ள பற்றால் இதை காணிக்கையாக வழங்கினேன். இவ்வாறு ஜாகீர் உசேன் கூறினார். எனினும், வைரக் கிரீடத்தின் மதிப்பைக் கூற அவர் மறுத்துவிட்டார்.

x