வடகரையில் இருந்து வடஅமெரிக்கா வரை திருப்பாவை பிரச்சார யாத்திரை: மார்கழி 1-ல் தொடக்கம்!


ஸ்ரீவில்லிபுத்தூர்: ஒரு லட்சம் பேருக்கு திருப்பாவை கற்றுத்தரும் நோக்கில் வடகரையில் இருந்து வடஅமெரிக்கா வரை திருப்பாவை பிரச்சார இயக்கம் மார்கழி 1-ம் தேதி தொடங்க உள்ளதாக ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.

ஶ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தில் ஶ்ரீ சடகோபன் ராமானுஜ ஜீயர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ''ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் 216 அடி உயரம் கொண்ட ராமானுஜர் சிலையை பிரதிஷ்டை செய்த ஶ்ரீ திர்தண்டி சின்ன ஶ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் மார்கழி முதல் நாளில் ஆண்டாள் தாயாரை தரிசனம் செய்து மங்களாசாசனம் செய்வதற்காக டிசம்பர் 15-ம் தேதி ஶ்ரீவில்லிபுத்தூர் வருகிறார். டிசம்பர் 15-ம் தேதி மாலை 6 மணி முதல் 8 மணி வரை இளையராஜா இசையமைத்த ஆண்டாள் பாசுரம் கச்சேரி மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இளையராஜா திவ்ய பாசுரங்கள் என்ற தலைப்பில் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு இசையமைத்துள்ளார். ஶ்ரீவில்லிபுத்தூர் நடைபெறும் நிகழ்ச்சிக்கு இளையராஜா வருவதாக தெரிவித்துள்ளார். மார்கழி 1-ம் தேதி காலை ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் மடத்தில் திருவாரதனை, தீர்த்தக்கோஷ்டி நடைபெற உள்ளது.

அமெரிக்காவில் உள்ள சுதர்சன சேவா சமிதி சார்பில் 1 லட்சம் பேருக்கு திருப்பாவை கற்றுத் தரும் நோக்கில் வடகரையில் இருந்து வடஅமெரிக்கா வரை 40 நாட்கள் திருப்பாவை பிரச்சார இயக்கம் ராஜபாளையம் அருகே வடகரையில் டிசம்பர் 16-ம் தேதி காலை தொடங்க உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு ஆண்டாள் அருள் மற்றும் சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசியை பெற்றுச் செல்ல வேண்டும்'' இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சுதர்சன சேவா சமிதி நிர்வாகி வெங்கடேஷ் ஐயங்கார், வி.ஹெச்.பி திருக்கோயில், திருமடங்கள் பாதுகாப்பு பேரவை தென் பாரத அமைப்பாளர் சரவணா கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.

x