ஸ்ரீரங்கம் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வஸ்திர மரியாதை!


திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வஸ்திர மரியாதை இன்று வழங்கப்பட்டது.

கி.பி.1320-ல் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற மாற்று மதத்தவரின் படையெடுப்பின் காரணமாக சுமார் 40 ஆண்டு காலம் ஸ்ரீரங்கம் கோயில் நம்பெருமாள் திருமலை கோயிலில் வைத்து பாதுகாக்கப்பட்டார். இவ்வாறு அவர் வைக்கப்பட்டிருந்த மண்டபம் திருமலை கோயிலில் ரெங்கநாயகலு மண்டபம் என்னும் பெயரில் இன்றும் உள்ளது. நம்பெருமாள் திருமலையில் இருந்த ரெங்கநாயகலு மண்டபத்தில் தான் இக்கோயிலின் முக்கிய நிகழ்வுகள் பல இன்றளவும் நடைபெறுகின்றன.

திருமலைக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் நீண்டகாலமாக மங்கல பொருட்கள் பரிவர்த்தனை இருந்து வந்தது. இவ்வகையில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலிருந்து புது வஸ்திர மரியாதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு ரங்கநாதர் மூலவர், நம்பெருமாள் உற்சவர், ஸ்ரீரெங்கநாச்சியார் மற்றும் ராமானுஜருக்கு வஸ்திரங்கள், குடைகள் உள்ளிட்ட மரியாதைகளை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமல் ராவ் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு கோயிலுக்கு எடுத்து வந்தனர்.

இந்த வஸ்திர பொருட்கள் இன்று ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஸ்ரீரங்கவிலாச மண்டபத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பின்னர், காலை 7 மணிக்கு திருப்பதி வஸ்திர மரியாதை புறப்பட்டு வீதி உலா வந்தது. பின்னர் திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அலுவலர் லோகநாதன், மடம் பொறுப்பாளர் ராஜா ரெட்டி ஆகியோரிடமிருந்து வஸ்திரமரியாதையை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அர்ச்சகர் சுந்தர்பட்டர், கண்காணிப்பாளர்கள் வெங்கடேசன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

x